இந்தியாவில் 93% கிராமங்களில் மொபைல் போன் வழி இணையதள வசதி: மத்திய அரசு தகவல்
இந்தியாவில் 93% கிராமங்களில் மொபைல் போன் வழியேயான இணையதள தொடர்பு வசதி உள்ளது என மத்திய அரசு இன்று தெரிவித்து உள்ளது.
புதுடெல்லி,
நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி, வருகிற டிசம்பர் 29-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடரில், நாட்டில் அதிகரித்து வரும் வேலை வாய்ப்பின்மை விவகாரம், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
இந்நிலையில், நாடாளுமன்றத்தின் மக்களவையில் பா.ஜ.க. உறுப்பினர்கள் உபேந்திரா சிங் ராவத் மற்றும் போலாநாத் ஆகியோர் உத்தர பிரதேசத்தில் பல கிராமங்களில் மொபைல் போன் வழியேயான இணையதள தொடர்பு வசதி இல்லாதது பற்றி எழுப்பிய கேள்விக்கு மத்திய தகவல் தொடர்பு இணை மந்திரி தேவுசின்ஹ் சவுகான் பதிலளித்து பேசினார்.
அவர் பேசும்போது, உத்தர பிரதேசத்தில் மொத்தமுள்ள 1 லட்சத்து 5 ஆயிரத்து 531 கிராமங்களில் 1 லட்சத்து 5 ஆயிரத்து 257 கிராமங்கள் மொபைல் போன் வழியேயான இணையதள தொடர்பு வசதி பெற்றுள்ளன. 274 கிராமங்களுக்கு மொபைல் இணையதள தொடர்பு வசதி இல்லை என கூறினார்.
அவர் தொடர்ந்து பேசும்போது, நாட்டில் மொத்தமுள்ள 6 லட்சத்து 44 ஆயிரத்து 531 கிராமங்களில் 6 லட்சத்து 5 ஆயிரத்து 230 கிராமங்கள் மொபைல் போன் வழியேயான இணையதள தொடர்பு வசதியை பெற்றுள்ளன. 38 ஆயிரத்து 901 கிராமங்களுக்கு மொபைல் இணையதள தொடர்பு வசதி இல்லை என அவர் கூறியுள்ளார்.