சட்டசபை தேர்தலில் போட்டியிட 95 சதவீத எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் டிக்கெட்; காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் அறிவிப்பு


சட்டசபை தேர்தலில் போட்டியிட 95 சதவீத எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் டிக்கெட்; காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் அறிவிப்பு
x

சட்டசபை தேர்தலில் போட்டியிட 95 சதவீத எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் டிக்கெட் வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே.சிவக்குமார் அறிவித்துள்ளார்.

உப்பள்ளி:

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் உப்பள்ளியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கலசா-பண்டூரி திட்டம்

மராட்டியம், கோவா, கர்நாடகம் ஆகிய 3 மாநிலங்களிலும், மத்தியிலும் பா.ஜனதா ஆட்சி நடக்கிறது. கர்நாடகத்தில் கடந்த 3½ ஆண்டுகளாக பா.ஜனதா ஆட்சி தான் நடக்கிறது. அப்போது முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உள்பட பா.ஜனதா தலைவர்கள் மகதாயி திட்டம் குறித்து வாய் திறக்காமல் இருந்தனர். சட்டசபை தேர்தல் நெருங்குவதால், கலசா-பண்டூரி கால்வாய் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக பா.ஜனதா தலைவர்கள் சொல்கிறார்கள்.

எஸ்.எம்.கிருஷ்ணா முதல்-மந்திரியாக இருந்தபோது, இந்த திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது. அப்போது எச்.கே.பட்டீல் நீர்ப்பாசனத்துறை மந்திரியாக இருந்தார். இந்த விவகாரத்தில் தீர்ப்பாயம் கடந்த 2018-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. அதன் பிறகு இந்த திட்டத்தை அமல்படுத்த எந்த நடவடிக்கையையும் பா.ஜனதா அரசு எடுக்கவில்லை. இப்போது கலசா-பண்டூரி திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியதாக கூறுகிறார்கள். அந்த உத்தரவில் தேதி கூட குறிப்பிடவில்லை.

பொய் பேசுகிறார்கள்

மேலும் அந்த உத்தரவில், இது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு உட்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் பா.ஜனதாவுக்கு 26 எம்.பி.க்கள் உள்ளனர். அவர்கள் பிரதமரை சந்தித்து சிக்கல்களுக்கு தீர்வு காண முயற்சி செய்யலாம் அல்லவா?. தேர்தல் வருவதால் இதை வைத்து காங்கிரசார் அரசியல் செய்வார்கள் என்று கருதி அவசர அவசரமாக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக அறிவித்துள்ளனர். இது பொய்.

இட ஒதுக்கீட்டு விஷயத்திலும் இதே போல் பா.ஜனதாவினர் பொய் பேசுகிறார்கள். லிங்காயத், ஒக்கலிகர்களுக்கு தனி இட ஒதுக்கீட்டு பிரிவை தொடங்குவதாக அறிவித்துள்ளனர். இது அந்த சமூகங்களின் மக்களை திசை திருப்புவது ஆகும். தலித் மற்றும் பழங்குடியின மக்களுக்கு இட ஒதுக்கீட்டை மாநில அரசு அதிகரித்துள்ளது. அது நீடிக்க வேண்டுமெனில் அரசியல் சாசனத்தின் 9-வது அட்டவணையில் திருத்தம் செய்ய வேண்டும். அந்த வேலையை மத்திய அரசு செய்ய வேண்டும். இதுபற்றி மத்திய அரசிடம் பா.ஜனதா அரசு பேசவே இல்லை.

குற்றமற்றவர்

கா்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், மக்கள்தொகை அடிப்படையில் சமூகங்களுக்கு நீதி வழங்கப்படும். தொழில் அதிபர் தற்கொலையில் அரவிந்த் லிம்பாவளி எம்.எல்.ஏ. மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவருக்கு ஆதரவாக இந்த அரசு பி அறிக்கை தாக்கல் செய்யும். அதாவது அவர் குற்றமற்றவர் என்று அறிவிக்கும். சட்டசபையில் தேர்தலில் போட்டியிட எங்கள் கட்சியில் எம்.எல்.ஏ.க்களாக உள்ளவர்களில் 95 சதவீதம் பேருக்கு மீண்டும் டிக்கெட் கிடைக்கும். காங்கிரசில் கோஷ்டிகள் இல்லை.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.


Next Story