லடாக்கில் கனமழை; 450 ஆண்டு கால கட்டிடம் இடிந்து விழுந்தது


லடாக்கில் கனமழை; 450 ஆண்டு கால கட்டிடம் இடிந்து விழுந்தது
x

லடாக்கில் பெய்த தொடர் கனமழையால் 450 ஆண்டு கால கட்டிடம் இடிந்து விழுந்து உள்ளது.

லே,

டெல்லி, அரியானா, இமாசல பிரதேசம், உத்தரகாண்ட், ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீர் போன்ற வடமாநிலங்களில் அடுத்த 48 மணிநேரத்திற்கு கன முதல் தீவிர கனமழை பெய்ய கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு வெளியிட்டு இருந்தது.

இதன்படி, டெல்லியில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இதுபற்றி இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தியில், நேற்று காலை 8.30 மணி நிலவரப்படி, கடந்த 24 மணிநேரத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 153 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. இதனால் டெல்லிவாசிகளுக்கு அசவுகரியம் ஏற்பட்டு உள்ளது என தெரிவித்து இருந்தது. இதனால், கடந்த 1982-ம் ஆண்டு ஜூலைக்கு பின்பு அதிக மழை பொழிவு ஏற்பட்டு உள்ளது.

இந்நிலையில், லடாக் யூனியன் பிரதேசத்தில் லே நகரில் கார்யூக் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. நேற்று மாலை பெய்த கனமழையால், 450 ஆண்டுகால கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்து உள்ளது. வேறு சில வீடுகளும் பாதிப்படைந்து உள்ளன.

அந்த பகுதியை சேர்ந்த ஹைதர் என்ற உள்ளூர்வாசி ஒருவர் கூறும்போது, இந்த பகுதியில் பெய்த கனமழையாலேயே இந்த பழமையான கட்டிடம் இடிந்து விழுந்து உள்ளது. இந்த கட்டிடம் 450 ஆண்டுகள் பழமையானது என கூறியுள்ளார். கடந்த 9 மணிநேரத்தில் 14.5 மி.மீ. மழை பெய்து உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

கடந்த 2010-ம் ஆண்டு மேகவெடிப்பு ஏற்பட்டபோது கூட இந்த அளவுக்கு பாதிப்பு ஏற்படவில்லை. எனினும், இந்த முறை பழைய கட்டிடங்களுக்கு நிறைய பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என அவர் கூறியுள்ளார்.


Next Story