மேற்கு வங்காள கவர்னர் வாகன அணிவகுப்பிற்குள் திடீரென நுழைந்த கார்


மேற்கு வங்காள கவர்னர் வாகன அணிவகுப்பிற்குள் திடீரென நுழைந்த கார்
x

மேற்கு வங்காளத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை சந்தித்து விவரங்களை கேட்டறிந்து விட்டு கவர்னர் டெல்லிக்கு புறப்பட்டார்.

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில், சந்தேஷ்காளி பகுதியில் பெண்கள் சிலர் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த பகுதியை சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஷாஜகான் ஷேக் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் பெண்களுக்கு எதிராக அராஜகங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு எதிராக, அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சூழலில், அவர்களை சந்திப்பதற்காக கவர்னர் சி.வி. ஆனந்த போஸ் கடந்த திங்கட்கிழமை நேரில் சென்றுள்ளார். அவர், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை சந்தித்து விவரங்களை கேட்டறிந்து விட்டு டெல்லிக்கு புறப்பட்டார்.

அவர் புதுடெல்லியில், வாகனத்தில் சென்றபோது, கவர்னரின் பாதுகாப்புக்கு அணிவகுத்து வந்த வாகனங்களின் இடையே கார் ஒன்று திடீரென நுழைந்துள்ளது.

இதனை தொடர்ந்து, அந்த கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். அவர் மீது டெல்லி போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்தனர். இந்த விவகாரத்தில், நாசவேலை இருக்க கூடும் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுபற்றி டெல்லி போலீசார் விசாரித்து வருகின்றனர் என கவர்னர் மாளிகை அதிகாரி தெரிவித்து உள்ளார்.


Next Story