பி.எம்.டி.சி. பஸ் சக்கரத்தில் சிக்கி படுகாயம் அடைந்த கல்லூரி மாணவி சிகிச்சை பலனின்றி சாவு
பி.எம்.டி.சி. பஸ் சக்கரத்தில் சிக்கி படுகாயம் அடைந்த கல்லூரி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
பெங்களூரு:
கோலார் மாவட்டம் கோலார் தங்கவயலை சேர்ந்தவர் ஷில்பா (வயது 21). இவர் பெங்களூரு ஞானபாரதி பகுதியில் உள்ள பெங்களூரு பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி. கணிதம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். மேலும் விடுதியில் தங்கி இருந்தார். இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி கல்லூரி முடிந்ததும் விடுதிக்கு செல்வதற்காக பி.எம்.டி.சி. பஸ்சுக்காக ஷில்பா காத்து இருந்தார்.
அப்போது அங்கு வந்த பி.எம்.டி.சி. பஸ்சில் ஷில்பா ஏற முயன்றார். ஆனால் இதனை கவனிக்காமல் டிரைவர் பஸ்சை முன்நோக்கி நகர்த்தினார். இதனால் ஷில்பா பஸ்சில் இருந்து தவறி விழுந்தார். அப்போது ஷில்பாவின் உடல் மீது பஸ்சின் சக்கரம், ஏறி இறங்கியது. இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய ஷில்பாவை சக மாணவர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு ஷில்பாவுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். அவருக்கு 7 முறை அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டு இருந்தது. ஆனாலும் ஷில்பாவின் இடுப்புக்கு கீழ் உள்ள பகுதிகள் செயலிழந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் ஷில்பா உயிரிழந்தார். இதுகுறித்து ஞானபாரதி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.