நாடக நிகழ்ச்சியின்போது நடனமாடிய கலைஞர் திடீர் சாவு
நாடக நிகழ்ச்சியின்போது நடனமாடிய கலைஞர் திடீரென மயங்கி விழுந்து இறந்தார்.
மங்களூரு/
கர்நாடக கடலோர மாவட்டங்களில் யக்ஷகானா நிகழ்ச்சி பிரசித்தி பெற்றதாகும். இதேபோல், நேற்று முன்தினம் தட்சிண கன்னடா மாவட்டம் கடபா தாலுகா எடமங்கலா அருகே இட்யகா நாடக நிகழ்ச்சி நடந்தது. இதில் அந்தப்பகுதியை சேர்ந்த காந்து அஜிலா முலங்கிரி என்ற கலைஞர் நடித்து கொண்டிருந்தார். இந்த நாடக நிகழ்ச்சியின்போது, காந்துவுக்கு சாமி அருள் வந்து மக்களுக்கு ஆசி வழங்குவார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு நடந்த நிகழ்ச்சியில் காந்து, பக்தி பரசவத்துடன் நடனமாடி கொண்டிருந்தார்.
அப்போது திடீரென்று அவர் மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்தப்பகுதியில் இருந்தவர்கள் விரைந்து வந்து, அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், காந்து ஏற்கனவே மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். நடனமாடி கொண்டிருந்த நாடக கலைஞர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.