சறுக்கி விழுந்து பலியான மலையேற்ற வீரர்கள்; 2 நாட்களாக உடலை சுற்றி, சுற்றி வந்த வளர்ப்பு நாய்


சறுக்கி விழுந்து பலியான மலையேற்ற வீரர்கள்; 2 நாட்களாக உடலை சுற்றி, சுற்றி வந்த வளர்ப்பு நாய்
x

Courtesy: 

தினத்தந்தி 8 Feb 2024 2:04 PM GMT (Updated: 8 Feb 2024 2:08 PM GMT)

காலநிலை சரியில்லை என்று தெரிய வந்தபோது, அபிநந்தன் தனக்கு வழி தெரியும் என கூறி சென்றுள்ளார்.

சிம்லா,

இமாசல பிரதேசத்தில் 5 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ளது பீர் பில்லிங் என்ற மலைப்பகுதி. சுற்றுலா செல்வோரும், மலையேற்றம் மற்றும் பாராகிளைடிங் செய்வோரும் இந்த பகுதிக்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், அந்த பகுதிக்கு 4 பேர் ஒரு காரில் சென்றுள்ளனர். அவர்களில் 2 பேர் பெண்கள் ஆவர்.

இந்த நிலையில், ஒரு கட்டத்திற்கு மேல் அவர்களால் காரில் செல்ல முடியவில்லை. இதனால், காரை விட்டு இறங்கி கீழே நடக்க தொடங்கினார்கள். காலநிலை மாற தொடங்கியதும், 2 பேர் தங்களுடைய இருப்பிடத்திற்கு திரும்ப முடிவு செய்தனர். மற்றவர்களின் உதவியுடன் பாதுகாப்பாக வந்து சேர்ந்தனர்.

ஆனால், அபிநந்தன் குப்தா (வயது 30) மற்றும் பிரணீதா வாலா (வயது 26) ஆகிய இருவரும் திரும்பவில்லை. நீண்டநேரம் கடந்தும் இருவரும் வராத நிலையில், போலீசில் புகார் அளிக்கப்பட்டது. தேடுதல் குழு ஒன்று அவர்களை தேடுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இதில், மீட்பு குழுவில் ஒருவர் கூறும்போது, பாராகிளைடர்கள் பறந்து செல்ல கூடிய பகுதியில் இருந்து 3 கி.மீ. அடியில் அவர்கள் இருவரின் உடல்கள் கிடந்துள்ளன. சம்பவம் நடந்தபோது, பனிப்பொழிவு ஏற்பட்டு உள்ளது. அந்த பகுதி சரிவு நிறைந்தது. இதனால், சறுக்க கூடிய சாத்தியம் அதிகம் காணப்பட்டது.

அவர்கள் இருவரும் சறுக்கி, கீழே விழுந்திருக்க கூடும் என தோன்றுகிறது. அவர்கள் மேலே எழ முயன்று இருக்கின்றனர். ஆனால், மீண்டும் கீழே விழுந்திருக்கின்றனர் என கூறியுள்ளார்.

அவர்கள் இருவரின் உடல்கள் அருகே ஜெர்மன் ஷெப்பர்டு வகையை சேர்ந்த வளர்ப்பு நாய் குரைத்து கொண்டும், வாலை ஆட்டி கொண்டும் இருந்தது. காலநிலை சரியில்லை என்று தெரிய வந்தபோது, அபிநந்தன் தனக்கு வழி தெரியும் என கூறி சென்றுள்ளார். அவர், 4 ஆண்டுகளாக அந்த பகுதியில் இருந்து பாராகிளைடிங் மற்றும் மலையேற்ற செயல்களில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.

அவருடன் அந்த பெண்ணும், வளர்ப்பு நாயும் சென்றுள்ளது. ஆனால் பனிப்பொழிவால் அவர்கள் அதில் சிக்கி உயிரிழந்து உள்ளனர் என கூறப்படுகிறது. அவர்கள் இருவரும் உயிரிழந்த பின்னர் அவர்களை விட்டு செல்லாமல் சுற்றி, சுற்றி வந்துள்ளது. 48 மணிநேரம் வரை தொடர்ந்து குரைத்து கொண்டும், அவர்களையே சுற்றி, சுற்றி வந்து, வாலாட்டியபடியும் இருந்துள்ளது.


Next Story