தனியார் நிறுவன பெண் ஊழியர் கழுத்தை நெரித்து கொலை; காதலனுக்கு போலீஸ் வலைவீச்சு


தனியார் நிறுவன பெண் ஊழியர் கழுத்தை நெரித்து கொலை; காதலனுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 7 Jun 2023 12:15 AM IST (Updated: 7 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ெபங்களூருவில் தனியார் நிறுவன ெபண் ஊழியர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது காதலனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

பெங்களூரு:

வீட்டில் பெண் பிணம்

ஐதராபாத்தை சேர்ந்தவர் அகன்ஷா. இவர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இதற்காக இவர், ஜீவன்பீமா நகர் அருகே கொடிஹள்ளி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் அவருடன் பணியாற்றும் ெபண் ஒருவர், அகன்ஷாவின் வீட்டின் அருகே மற்றொரு வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் அவர், நேற்று முன்தினம் இரவு பணியை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்தார்.

அப்போது அகன்ஷாவின் வீட்டுக்கு அந்த ெபண் சென்றுள்ளார். அந்த சமயத்தில் அங்கு அகன்ஷா தரையில் பிணமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக ஜீவன்பீமாநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

கொலை

பின்னா் போலீசார், அகன்ஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முதலில் மர்மசாவு என வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே பிரேத பரிசோதனை முடிவில் அகன்ஷா கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், இதனை கொலை வழக்காக மாற்றி தீவிர விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக அவரது தோழியிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில், அகன்ஷாவுடன் அவரது காதலன் அர்பித் என்பவர் வசித்து வந்ததும், தற்போது அவர் மாயமாகி இருப்பதும் தெரியவந்தது. இதனால் அவர் தான், அகன்ஷாவை கழுத்தை நெரித்து கொன்றது தெரியவந்தது.

போலீஸ் வலைவீச்சு

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், ஐதராபாத்தை சேர்ந்த அகன்ஷாவும், டெல்லியை சேர்ந்த அர்பித்தும் முன்பு ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்துள்ளனர். அப்போது அவர்களுக்குள் காதல் மலர்ந்துள்ளது. இருவரும் காதலித்து வந்துள்ளனர். பின்னர் இருவரும் வேறு வேறு நிறுவனங்களுக்கு மாறினாலும், ஒரே வீட்டில் திருமணம் செய்யாமல் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில், அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அவர்கள் பிரிய முடிவு செய்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினமும் இதேபோன்று தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அர்பித், அகன்ஷாவை கழுத்தை நெரித்துள்ளார். இதில் அவர் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அர்பித், அகன்ஷா தற்கொலை செய்தது போல நாடகமாட மின்விசிறியில் கயிறை கட்டினார். பின்னர் அவரை தூக்கில் தொங்கவிட முயற்சி செய்துள்ளார். ஆனால் அது முடியாமல் போகவே, அர்பித் அங்கிருந்து தப்பி ஓடியது தெரியவந்தது. இதுகுறித்து ஜீவன் பீமாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அர்பித்தை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story