ஒடிசா ரெயில் விபத்துக்கு சில வினாடிகளுக்கு முன்... வெளியான வீடியோவால் பரபரப்பு
ஒடிசா ரெயில் விபத்து ஏற்படுவதற்கு சில வினாடிகளுக்கு முன் ரெயில் பெட்டி ஒன்றில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் வெளிவந்து பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
புதுடெல்லி,
ஒடிசாவின் பாலசோர் பகுதியில் கடந்த 2-ந்தேதி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில், பெங்களூருவில் இருந்து ஹவுரா சென்ற சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் சரக்கு ரெயில் என 3 ரெயில்கள் அடுத்தடுத்து விபத்தில் சிக்கி தடம் புரண்டன.
இந்த சம்பவத்தில் 288 பேர் உயிரிழந்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்நிலையில், அசாமில் சரக்கு ரெயிலின் 20 பெட்டிகள் நேற்று திடீரென தடம் புரண்டு விபத்திற்குள்ளாகி இருக்கின்றன.
ஒடிசாவின் ஜஜ்பூர் கியோஞ்சர் சாலையருகே பாதுகாப்பு பகுதியில் தண்டவாளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த, என்ஜின் இல்லாத சரக்கு ரெயிலின் பெட்டிகள், இடி இடித்ததில் உருண்டுள்ளன. இதில், சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர்.
இதேபோன்று, டெல்லியில் இருந்து ஒடிசாவின் புவனேஸ்வர் நோக்கி சென்ற ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயில் பெரும் விபத்தில் இருந்து தப்பியது.
அந்த ரெயில், ஜார்க்கண்ட் மாநிலத்தின் பொகாரோ மாவட்டத்தில், போஜுதி ரெயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தபோது, சந்தல்டி பகுதியில் ரெயில்வே கிராசிங்கில் கேட் போடப்பட்டது. சரியாக கதவு மூடப்படும் சமயத்தில் விரைவாக வந்த டிராக்டர் ஒன்று அதன் மீது மோதி நின்றது.
அதன்பின்னர், அந்த டிராக்டரால் நகர முடியவில்லை. இதனால் ரெயில்வே கிராசிங் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
எனினும், இதனை தூரத்திலேயே கவனித்து விட்ட எக்ஸ்பிரஸ் ரெயில் ஓட்டுனர் உடனடியாக பிரேக் அடித்து, ரெயிலை நிறுத்தினார். இதனால், ரெயில் விபத்து எதிலும் சிக்காமல் நின்றது. இதனால், ரெயில் மீண்டும் புறப்பட்டு செல்ல 45 நிமிடங்கள் வரை காலதாமதம் ஏற்பட்டது.
சமீப நாட்களாக ரெயில்கள் அதிகம் தடம் புரள்வதும், விபத்தில் சிக்குவதும் அதிகரித்து காணப்படுகிறது.
இந்த நிலையில், ஒடிசா பாலசோர் பகுதியில் விபத்தில் கோரமண்டல் ரெயில் சிக்குவதற்கு சில வினாடிகளுக்கு முன் எடுட்ககப்பட்ட காட்சிகள் அடங்கிய புதிய வீடியோ ஒன்று வெளிவந்து வைரலாகி வருகிறது.
இதனை ஒடிசா டி.வி. வெளியிட்டு, பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில், ரெயிலின் தூய்மை பணியாளர் ஒருவர் பெட்டியில் இரவு நேரத்தில் தரை பகுதியில் தூய்மை செய்து கொண்டு இருக்கியார்.
ரெயில் பெட்டியில் பயணிகள் ஓய்வாக படுத்தபடி காணப்படுகின்றனர். திடீரென ரெயில் பெட்டி குலுங்குவதும், பயணிகள் அலறும் சத்தமும், வீடியோ எடுத்த கேமிரா குலுங்குவதும் அதன்பின்னர், இருளாகவும் காட்சியளிக்கிறது.
இந்த வீடியோவை பயணி ஒருவர் எடுத்து உள்ளார். எனினும், இந்த வீடியோவின் உண்மை தன்மை ஆய்வு செய்யப்படவில்லை.
கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்: