தனியார் நிறுவனத்துக்கு ரூ.1 கோடி அபராதம்
சரியாக குடிநீர் வினியோகம் செய்யாத தனியார் நிறுவனத்துக்கு ரூ.1 கோடி அபராதம் விதிக்க உப்பள்ளி-தார்வார் மாநகராட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
உப்பள்ளி-
உப்பள்ளி-தார்வார் மாநகராட்சி சாதாரண கூட்டம் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு மேயர் ஈரேஷ் அஞ்சட்டகேரி தலைமை தாங்கினார். உப்பள்ளி-தார்வார் மாநகராட்சி பகுதிகளுக்கு தனியார் நிறுவனம் சார்பில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக இந்த நிறுவனம் பொதுமக்களுக்கு சரியாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை என தெரிகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள் தனியார் நிறுவனம் மீது குற்றம்சாட்டி வந்தனர்.
இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் கோபாலகிருஷ்ணனிடம் புகார் கொடுக்கப்பட்டது. இதுகுறித்து அவர் தனியார் நிறுவனத்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். ஆனால், அதற்கு அந்த நிறுவனம் சார்பில் எந்த பதிலும் அளிக்கவில்லை என தெரிகிறது. இந்த நிலையில், சரியாக குடிநீர் வினியோகம் செய்யாத தனியார் நிறுவனத்துக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்து மாநகராட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.