கடந்த ஆண்டு மெட்ரோ ரெயிலில் டிராலி எடுத்துச்சென்ற பயணிகளிடம் இருந்து ரூ.36¾ லட்சம் அபராதம் வசூல்
கடந்த ஆண்டு மெட்ரோ ரெயிலில் டிராலி எடுத்துச்சென்ற பயணிகளிடம் இருந்து ரூ.36¾ லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு:
பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பெரிய சூட்கேசுகளுடன் (டிராலி) மெட்ரோ ரெயிலில் பயணிகள் பயணம் மேற்கொள்வதால், சில பயணிகளுக்கு இடையூறு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் பெரிய சூட்கேசுகளை மெட்ரோ ரெயிலில் எடுத்து செல்வதை தவிர்க்கும்படி பயணிகளுக்கு, மெட்ரோ ரெயில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்து இருந்தது. ஆனால் இந்த வேண்டுகோளை கருத்தில் கொள்ளாமல் மெட்ரோ ரெயில்களில் பெரிய சூட்கேசுகளை எடுத்து சென்ற பயணிகளிடம் இருந்து கடந்த 5 ஆண்டுகளில் மெட்ரோ ரெயில் நிலைய ஊழியர்கள் ரூ.1 கோடியே 17 லட்சத்து 16 ஆயிரத்து 748 ரொக்கத்தை அபராதமாக வசூலித்து உள்ளனர். இதில் யஷ்வந்தபுரம் ரெயில் நிலையத்தில் தான் அதிக பயணிகளிடம் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. சிக்பேட்டை, கெம்பேகவுடா, பையப்பனஹள்ளி, எலச்சினஹள்ளி மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் பெரிய சூட்கேசுகளுடன் சென்ற அதிக பயணிகளிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. பெரிய சூட்கேசுகளை எடுத்து சென்றதாக கடந்த 2018-ம் ஆண்டு பயணிகளிடம் இருந்து ரூ.36 லட்சத்து 5 ஆயிரத்து 906-ம், 2019-ம் ஆண்டு 29 லட்சத்து 43 ஆயிரத்து 497-ம், 2020-ம் ஆண்டு ரூ.8 லட்சத்து 41 ஆயிரத்து 260-ம், 2021-ம் ஆண்டு ரூ.6 லட்சத்து 50 ஆயிரத்து 781-ம், 2022-ம் ஆண்டு ரூ.36 லட்சத்து 75 ஆயிரத்து 304-ம் அபராத தொகை வசூலிக்கப்பட்டு உள்ளது.