வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.1,000 மதிப்பிலான உணவு பொருள் தொகுப்பு; கர்நாடக அரசு அறிவிப்பு


வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.1,000 மதிப்பிலான உணவு பொருள் தொகுப்பு; கர்நாடக அரசு அறிவிப்பு
x

கர்நாடகத்தில் மேலும் 5 நாட்கள் கனமழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை-வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு ரூ.1,000 மதிப்பிலான உணவு பொருள் தொகுப்பு வழங்கப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

பெங்களூரு:

ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து பெய்து வருகிறது. குறிப்பாக கர்நாடகத்தில் வடகர்நாடகம், மலைநாடு, கடலோர மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் காவிரி, கிருஷ்ணா, கட்டப்பிரபா, துங்கா, துங்கபத்ரா உள்பட முக்கிய ஆறுகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளது. இருகரைகளையும் தொட்டப்படி வெள்ளம் பாய்ந்தோடி வருகிறது. மேலும் நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. இதனால் ஆற்றங்கரையோர கிராமங்களுக்குள் மழைநீர் புகுந்துள்ளது.

இந்த மழை-வெள்ளத்தால் சிவமொக்கா, உடுப்பி, தட்சிணகன்னடா, சிக்கமகளூரு, உத்தரகன்னடா, ஹாசன், மண்டியா, மைசூரு, விஜயநகர், விஜயாப்புரா, பெலகாவி, யாதகிரி உள்பட 14 மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல பகுதிகளில் சாலைகளில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. சில பகுதிகளில் பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான வீடுகளும் கனமழைக்கு இடிந்து விழுந்துள்ளன. அத்துடன் பேய் மழைக்கு நூற்றுக்கணக்கான மின்கம்பங்களும் சேதமடைந்துள்ளன.

நிவாரண உதவி கேட்டு கோரிக்கை

தொடர் கனமழை-வெள்ளத்தால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதுதவிர ஆறுகளின் கரையோரங்களில் வசித்து வரும் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் தங்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு கர்நாடக அரசு ரூ.1,000 மதிப்பிலான நிவாரண உணவு பொருள் வழங்குவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து கர்நாடக வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

நிவாரண முகாம்கள்

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. கடந்த 3 ஆண்டுகளாக இயல்பை விட கூடுதல் மழை பெய்ததால் வெள்ள சேதங்கள் ஏற்பட்டுள்ளன. கர்நாடகத்தில் 14 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. 161 கிராமங்களில் 21 ஆயிரத்து 727 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். மழைக்கு கடந்த ஜூன் 1-ந்ேததி முதல் ஆகஸ்டு 7-ந்ேததி (ேநற்று முன்தினம்) வரை 73 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது மின்னல் தாக்கி 15 ேபரும், மரம் முறிந்து விழுந்து 5 பேரும், வீடுகள் இடிந்து விழுந்து 19 ேபரும், ெவள்ளத்தில் சிக்கி 24 ேபரும் உயிரிழந்துள்ளனர்.

வெள்ளத்தில் சிக்கிய 8 ஆயிரத்து 197 பேரை அரசு மீட்டுள்ளது. 75 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டு அங்கு 7 ஆயிரத்து 386 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 666 வீடுகள் முழுமையாக இடிந்து விழுந்துள்ளன. 2 ஆயிரத்து 949 வீடுகள் தீவிரமாகவும், 17 ஆயிரத்து 750 வீடுகள் பாதி அளவுக்கும் சேதம் அடைந்துள்ளன. மழைக்கு 509 கால்நடைகள் இறந்துள்ளன.

ஆரம்ப சுகாதார நிலையங்கள்

ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 87 எக்டேரில் விவசாய பயிர்களும், 7 ஆயிரத்து 942 எக்டேரில் தோட்டக்கலை பயிர்களும் நாசம் அடைந்துள்ளன. ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 768 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலைகள் சேதம் அடைந்துள்ளன. 1,152 சிறிய பாலங்கள், 4 ஆயிரத்து 561 பள்ளி கட்டிடங்கள், 122 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 2 ஆயிரத்து 249 அங்கன்வாடி மையங்கள், 17 ஆயிரத்து 66 மின் கம்பங்கள், 1,472 டிரான்ஸ்பார்மர்கள், 95 ஏரிகள் சேதம் அடைந்துள்ளன.

குடகு, பெலகாவி, தட்சிண கன்னடா, ராய்ச்சூர் மாவட்டங்களில் 5 தேசிய பேரிடர் மீட்பு படைகள் நிறுத்தப்பட்டுள்ளன. 4 மாநில பேரிடர் மீட்பு குழுக்கள் பெலகாவி, உத்தரகன்னடா, உடுப்பி மற்றும் தட்சிண கன்னடா மாவட்டங்களில் இருக்கின்றன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரண பணிகளை மேற்கொள்ள இதுவரை ரூ.555 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

வெள்ள சேதங்கள்

முழுமையாக வீடுகளை இழந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். மழை நின்றததும் வெள்ள சேதங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தயாரிக்கும்படி கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளோம். அந்த அறிக்கை வந்ததும் அதன் அடிப்படையில் கர்நாடகத்திற்கு நிவாரண நிதி ஒதுக்குமாறு மத்திய அரசிடம் வலியுறுத்துவோம்.

கலெக்டர்களின் வங்கி கணக்கில் ரூ.857 கோடி கையிருப்பு உள்ளது. நிவாரண பணிகளை மேற்கொள்ள நிதி பற்றாக்குறை இல்லை. நான் நாளை (இன்று) சித்ரதுர்கா, தாவணகெரே மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து வெள்ள சேதங்களை ஆய்வு செய்ய இருக்கிறேன். கர்நாடகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று தகவல் வந்துள்ளது. 15-ந் தேதிக்கு பிறகு மழை படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது. நிவாரண முகாம்கள் மற்றும் உறவினர் வீடுகள் தஞ்சம் புகுந்துள்ள மக்களுக்கு நிவாரண உணவு பொருள் தொகுப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு தொகுப்பின் மதிப்பு ரூ.1,000 ஆகும்.

இவ்வாறு ஆர்.அசோக் கூறினார்.


Next Story