காட்டுயானை தாக்கி வனத்துறை அதிகாரி சாவு


காட்டுயானை தாக்கி வனத்துறை அதிகாரி சாவு
x
தினத்தந்தி 1 Sept 2023 12:15 AM IST (Updated: 1 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஹாசனில் படுகாயம் அடைந்த காட்டு யானையை பிடிக்கும் பணியில் வனத்துறை அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர். அப்போது காட்டுயானை தாக்கியதில் வனத்துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்தார்.

ஹாசன்:-

காட்டுயானை தாக்குதல்

ஹாசன் மாவட்டம் சக்லேஷ்புரா, அரக்கல்கோடு, ஆலூர், பேலூர், எசலூர் பகுதியில் கடந்த 15 நாட்களாக சுற்றி திரிந்த பீமா என்ற யானை, சக காட்டுயானைகள் தாக்கி படுகாயம் அடைந்தது. இதை பார்த்த கிராம மக்கள் அந்த யானையை பிடிக்கும்படி வனத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தனர். அதன்படி கடந்த 25-ந் தேதி வனத்துறை அதிகாரிகள் மயக்க ஊசி செலுத்தி அந்த காட்டுயானையை பிடித்தனர். பின்னர் அந்த யானைக்கு சிகிச்சை அளித்து, வனப்பகுதியில் விட்டனர்.

இதையடுத்து மீண்டும் அந்த காட்டுயாைனயின் உடலில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த முறை வால் பகுதியில் காயம் ஏற்பட்டிருந்தது. இதை அறிந்த வனத்துறை அதிகாரிகள் மீண்டும் அந்த காட்டுயானையை பிடித்து சிகிச்சை அளிக்க முடிவு செய்தனர். இதற்காக பெங்களூரு வனத்துறை அதிகாரிகளிடம் அனுமதி கேட்டிருந்தனர். அவர்கள் அனுமதி அளித்தனர். இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் ஹர்ஷா உள்பட 3 கும்கி யானைகள் உதவியுடன் பீமா காட்டுயானையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

வனத்துறை அதிகாரி சாவு

நேற்று அந்த காட்டு யானை ஆலூரை அடுத்த ஹள்ளியூரில் நடமாடுவதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கும்கி யானைகளுடன் சென்ற வனத்துறை அதிகாரிகள் அந்த காட்டு யானையை சுற்றி வளைத்தனர். அப்போது வனத்துறை அதிகாரி வெங்கடேஷ் மயக்க ஊசி செலுத்தும் துப்பாக்கியால் காட்டுயானையை சுட்டார்.

அந்த மயக்க ஊசி யானையின் மீது பட்டதும், திமிர் பிடித்து, வனத்துறை ஊழியர்களை துரத்தியது. இதை பார்த்த வனத்துறை அதிகாரிகள் அங்கிருந்து சிதறி ஓடினர். அப்போது வனத்துறை அதிகாரி வெங்கடேஷ் மட்டும் காட்டுயானையிடம் சிக்கி கொண்டார். அவரை துரத்தி சென்று மடக்கி பிடித்த காட்டுயானை தூக்கி வீசியதுடன் காலால் மிதித்தது. இதில் வனத்துறை அதிகாரிகள் வெங்கடேஷ் படுகாயம் அடைந்தார். இதை பார்த்த வனத்துறை அதிகாரிகள் வெங்கடேசை மீட்டு ஹாசன் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

காட்டுயானையை பிடிக்க முயற்சி

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆலூர் போலீசார் மற்றும் வனத்துறை உயர் அதிகாரிகள் வந்து விசாரணை நடத்தினர். அதில் இறந்த வெங்கடேஷ் ஆலூரை ஹொன்னவள்ளி கிராமத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. வனக்காவலராக பணியாற்றி வந்த 1987-ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வெங்கடேஷ், 2019-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். மயக்க ஊசி செலுத்தி புலி, சிறுத்தை, யானைகளை பிடிப்பதில் பெயர் பெற்றவர். இதனால் வனத்துறை அதிகாரிகள் அவரை தொடர்ந்து பணியாற்றும்படி கூறினர். இதுவரை 10-க்கும் அதிகமான யானைகளை மயக்க ஊசி செலுத்தி பிடித்திருக்கிறார். திருமணமான இவருக்கு மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர். இதற்கிடையில் மயக்க ஊசி செலுத்தப்பட்ட அந்த யானையை பிடிக்கும் முயற்சியில் வனத்துறை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.


Next Story