வீட்டில் தீவிபத்து; தொழிலாளி உடல் கருகி சாவு


வீட்டில் தீவிபத்து; தொழிலாளி உடல் கருகி சாவு
x

சுள்ளியா அருகே, வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் தொழிலாளி உடல் கருகி பலியானாா்.

மங்களூரு;


தொழிலாளி


தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகா ஐவர்நாடு கிராமம் பர்லிகஜே பகுதியை சேர்ந்தவர் சுதாகர்(வயது 47). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் காலையில் சுதாகர் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.

அவரது மனைவி, குழந்தையை பள்ளிக்கு அழைத்து சென்று இருந்தார். அப்போது வீட்டில் எரிந்து கொண்டிருந்த விளக்கில் இருந்து எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த துணியில் தீப்பிடித்துக் கொண்டது. அந்த தீ மளமளவென வீடு முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. ஆனால் அதை கவனிக்காமல் சுதாகர் தொடா்ந்து தூங்கி கொண்டிருந்தார்.

தண்ணீரை ஊற்றி...

இதையடுத்து விழித்தெழுந்த சுதாகர் வீடு தீப்பிடித்து எரிவதை கண்டு அதிா்ச்சி அடைந்து வெளியே வர முயற்சித்தார். ஆனால் அதற்குள் தீ வீடு முழுவதும் பரவி எரிந்தது. இதனால் சுதாகரால் வெளியே வரமுடியவில்லை. அவர் வீட்டிற்குள் சிக்கி தீயில் உடல் கருகி பரிதாபமாக பலியானார். வீடு எரிவதையும், சுதாகர் வீட்டிற்குள் தீயில் சிக்கி அலறுவதையும் பார்த்து அக்கம்பக்கத்தினர் அதிா்ச்சி அடைந்தனர்.

உடனடியாக அவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர்.ஆனால் அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை. மேலும் இதுகுறித்து சுள்ளியா போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.


சோகம்

இந்த தீவிபத்தில் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் முற்றிலும் எரிந்து நாசமானது. மேலும் இதுகுறித்து தகவல் அறிந்து சுள்ளியா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். மேலும் வீட்டிற்கு சென்று பார்த்த போது சுதாகர் உடல் கருகி இறந்து கிடந்தார்.

சுதாகரை பார்த்து அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். இதையடுத்து அவரது உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பும், சோகமும் ஏற்பட்டு உள்ளது.


Next Story