கோலார் தங்கவயலில் ஒரு கிலோ தக்காளி ரூ.13-க்கு விற்பனை


கோலார் தங்கவயலில் ஒரு கிலோ தக்காளி ரூ.13-க்கு விற்பனை
x

கோலார் தங்கவயலில் ஒரு கிலோ தக்காளி ரூ.13-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கோலார் தங்கவயல்:-

தக்காளி விலை உயர்வு

ஆசியாவிலேயே மிகப்பெரிய தக்காளி மார்க்கெட் கோலார் மாவட்டத்தில் உள்ள ஏ.பி.எம்.சி. மார்க்கெட்டுதான். இந்த மார்க்கெட்டிற்கு மண்டியா, மைசூரு, சாம்ராஜ்நகர், பெங்களூரு மற்றும் ஆந்திரா மாநிலத்தில் இருந்து தக்காளிகள் வந்து கொண்டிருக்கிறது. கடந்த ஜூலை மாதம் மழை காரணத்தால் தக்காளி விளைச்சல் குறைந்து, விலை உயர்ந்தது. அதாவது 15 கிலோ எடை கொண்ட ஒரு கூடை தக்காளி ரூ.2,700 வரை விற்பனை செய்யப்பட்டது.

ஒரு கிலோ ரூ.200-க்கும் அதிகமாக விற்பனையானது. ஒன்றரை மாதங்கள் இந்த விலை உயர்வு இருந்தது. இதனால் பொதுமக்கள் தக்காளி வாங்குவதை தவிர்த்துவிட்டு, இறைச்சி உணவுக்கு மாறினர். அதேபோல வெளி மாநிலத்தில் இருந்து தக்காளி வாங்க வந்த வியாபாரிகளும், வருவதை நிறுத்திவிட்டனர். இதனால் கோலார் மார்க்கெட்டில் தக்காளி விலை கிடுகிடுவென குறைய தொடங்கியது.

ஒரு கிலோ ரூ.13-க்கு விற்பனை

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக 15 கிலோ எடை கொண்ட ஒரு கூடை தக்காளி ரூ.600-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிலோ தக்காளி ரூ.50-க்கு விற்பனையாகும் நிலை ஏற்பட்டது. இந்தநிலையில் நேற்று தக்காளி விலை மீண்டும் குறைந்தது. கோலார் தங்கவயலில் ஒரு கிலோ தக்காளி ரூ.12 முதல் ரூ.13 வரை விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல 4 கிலோ தக்காளி ரூ.50-க்கும், 8 கிலோ தக்காளி ரூ.100-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதை வைத்து பார்க்கும்போது தக்காளி விலை பழையப்படி குறைந்துவிட்டது என்று கூறப்படுகிறது. இதனால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் தக்காளி வாக்குவதில் அதிகளவு ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது.

தக்காளி வரத்து அதிகரிப்பு

இந்தநிலையில் கோலார் ஏ.பி.எம்.சி. மார்க்கெட்டிற்கு வரும் தக்காளிகளின் வரத்து அதிகரித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தக்காளி விலை இனி அதிகரிக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

அதேநேரம் விலை குறைவு என்பதால் வெளி மாநிலத்தை சேர்ந்த வியாபாரிகள் கோலார் மார்க்கெட்டிற்கு வந்து தக்காளியை வாங்கி செல்வதில் அதிகளவு ஆர்வம் காட்டி வருகின்றனர்.


Next Story