ரெயில் விபத்தில் இறந்தவர்களின் உடல்களை ஒப்படைப்பதில் தொடரும் இழுபறி : உறவினர்கள் கண்ணீருடன் ஒடிசாவில் முகாம்


ரெயில் விபத்தில் இறந்தவர்களின் உடல்களை ஒப்படைப்பதில் தொடரும் இழுபறி : உறவினர்கள் கண்ணீருடன் ஒடிசாவில் முகாம்
x

கோப்புப்படம்

ஒடிசா ரெயில் விபத்தில் இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காண முடியாததால் உறவினர்களிடம் ஒப்படைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.

புவனேஸ்வர்,

மேற்கு வங்காளத்தின் ஷாலிமாரில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூருவில் இருந்து ஹவுரா சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் சரக்கு ரெயில் ஒன்று கடந்த மாதம் 2-ந்தேதி ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தின் பகனகா பஜார் ரெயில் நிலையம் அருகே விபத்துக்குள்ளாகின.

இந்த விபத்தில் சுமார் 300 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை கிளப்பிய இந்த ரெயில் விபத்து தொடர்பாக சி.பி.ஐ. உள்பட பல்வேறு விசாரணை அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன.

பயங்கரமான இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணிகளை ரெயில்வேயும், ஒடிசா அரசும் துரிதப்படுத்தியது. அதன்படி 200-க்கும் மேற்பட்ட உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

காத்திருக்கும் 81 உடல்கள்

ஆனால் 81 உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு மோசமாக சிதைந்து விட்டன. எனவே அடையாளம் காண்பதற்காக அவற்றின் உறவினர்களிடம் மரபணு சோதனை நடத்தப்பட்டு உள்ளது.

ஆனால் இந்த சோதனை முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. இதனால் உடல்களை ஒப்படைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. இதனால் அந்த உடல்கள் அனைத்தும் புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன.

தங்கள் உறவுகளை பறிகொடுத்தது மட்டுமின்றி அவர்களின் உடல்களையும் பெறுவதில் சிக்கல் நீடிப்பதால் பலியானவர்களின் உறவினர்கள் தொடர்ந்து கண்ணீரிலேயே காலம் தள்ளுகின்றனர்.

நெஞ்சை உருக்கும் வேதனை

உடல்களை பெறுவதற்காக ஒடிசாவில் ஒரு மாதத்துக்கும் மேலாக முகாமிட்டுள்ள அவர்கள் புவனேஸ்வரில் உள்ள தங்கும் விடுதியில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரின் கண்ணீர் கதையும் கேட்போரின் நெஞ்சை உருக்குவதாக உள்ளது.

தனது கணவரின் உடலை பெறுவதற்காக காத்திருக்கும் பீகாரை சேர்ந்த பசந்தி தேவி கண்ணீருடன் கூறுறியதாவது:-

கூலித்தொழிலாளியான எனது கணவர் யோகேந்திர பஸ்வானின் உடலை பெறுவதற்காக நான் இங்கே இருக்கிறேன். பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஊருக்கு வரும்போது விபத்தில் அவர் உயிரிழந்தார்.

அவரது உடலை கொடுப்பதற்கு அதிகாரிகள் எந்த காலவரையறையும் தெரிவிக்கவில்லை. 5 நாட்களில் ஒப்படைக்கலாம் என ஒரு சிலரும், மேலும் நாட்கள் எடுக்கும் என மற்றொரு தரப்பும் கூறுகின்றனர்.

எனக்கு 5 குழந்தைகள் உள்ளனர். அதில் மூவரை வீட்டில் விட்டுவிட்டு, 2 மகன்களுடன் இங்கே இருக்கிறேன். எங்களுக்கு வருமானம் ஈட்டும் ஒரே நபராக கணவர் இருந்தார். அவர் இல்லாமல் எத்தனை நாட்கள் நாங்கள் உயிர்வாழ்வோமோ என தெரியவில்லை என்று பசந்தி தேவி கூறினார்.

வேலை தேடி சென்றார்

இதைப்போல பீகாரின் பர்னியாவை சேர்ந்த சூரஜ் குமார் என்ற வாலிபரின் உடலை பெறுவதற்காக அவரது தாத்தா நாராயன் ரிஷிதேவ் கடந்த மாதம் 4-ந்தேதி முதல் புவனேஸ்வர் எய்ம்ஸ் ஆஸ்பத்திரியையே சுற்றிச்சுற்றி வருகிறார்.

அவர் கூறும்போது, 'மெட்ரிக்குலேசன் படிப்பை முடித்து சென்னையில் வேலை தேடுவதற்காக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சூரஜ் சென்றான். விபத்தில் இறந்த அவனது உடலை பெறுவதற்காக எங்களிடம் ஏற்கனவே மரபணு மாதிரிகளை எடுத்து விட்டனர். ஆனால் இன்னும் முடிவை தெரிவிக்கவில்லை' என தெரிவித்தார்.

மேற்கு வங்காளத்தின் கூச்பெகர் மாவட்டத்தை சேர்ந்த சிவ்காந்த் ராயின் நிலைமை இன்னும் மோசமானது. அவர் தனது மகன் விபுல் என்பவரை இந்த விபத்தில் பறிகொடுத்திருந்தார். ஜூன் மாத இறுதியில் நடைபெற இருந்த விபுலின் திருமணத்துக்காக, திருப்பதியில் இருந்து சொந்த ஊருக்கு அவர் சென்று கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கியிருந்தார்.

கண்ணில் தாரை தாரையாக வழியும் நீரை துடைத்தவாறே சிவ்காந்த் ராய் கூறும்போது, 'எனது மகனின் உடல் கிம்ஸ் ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு இருந்திருக்கிறது. ஆனால் நான் பாலசோர் ஆஸ்பத்திரியில் தேடிக்ெகாண்டிருந்தேன். ஆனால் மகனின் உடலை பீகாரை சேர்ந்த மற்றொரு குடும்பத்தினருக்கு கொடுத்து விட்டதாக கிம்ஸ் ஆஸ்பத்திரி நிர்வாகம் தற்போது தெரிவித்தது. அந்த உடலை அவர்களும் தகனம் செய்து விட்டனர்' என்று தெரிவித்தார்.

பதில் இல்லை

இந்த விவகாரம் தொடர்பாக எய்ம்ஸ் ஆஸ்பத்திரி இயக்குனரை செய்தியாளர்கள் தொடர்பு கொண்டபோது, அவர் இது குறித்து பதிலளிக்கவில்லை.

அதேநேரம் உடல்கள் ஒப்படைக்கும் விவகாரத்தில் மாநில அரசுக்கும், எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கும் இடையே வெறும் ஒரு பாலமாக மட்டுமே செயல்படுவதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

எனவே மேற்படி 81 உடல்களும் உரியவர்களிடம் எப்போது ஒப்படைக்கப்படும் என்பதில் இழுபறி நீடிக்கவே செய்கிறது.


Next Story