வங்கி கணக்கில் ஒரு பைசா குறைவு; சைபர் தாக்குதலில் இருந்து 2 முறை தப்பிய நபர்


வங்கி கணக்கில் ஒரு பைசா குறைவு; சைபர் தாக்குதலில் இருந்து 2 முறை தப்பிய நபர்
x

உத்தர பிரதேசத்தில் வங்கி கணக்கில் ஒரு பைசா குறைவாக வைத்திருந்த நபர் இரு முறை சைபர் தாக்குதலில் இருந்து தப்பியுள்ளார்.



கிரேட்டர் நொய்டா,



உத்தர பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டா பகுதியில் தரீன் கிராமத்தில் வசித்து வருபவர் சுனில் குமார். கடந்த சில நாட்களுக்கு முன் தனது உறவினர்களில் ஒருவருக்கு ரூ.22 ஆயிரம் பணம் அனுப்ப வேண்டியிருந்து உள்ளது.

ஆனால், தவறுதலாக அடையாளம் தெரியாத வங்கி கணக்கிற்கு அவர் பணம் அனுப்பியுள்ளார். தவறான ஒரு எண்ணை பதிவு செய்ததில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனை தொடர்ந்து உடனடியாக அவர் வங்கியை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

ஆனால், அவருக்கு வேண்டிய உதவி கிடைக்கவில்லை. இதனால், அந்த வங்கியின் அதிகாரப்பூர்வ டுவிட்டரை தனது டுவிட்டரில் டேக் செய்து உதவி கேட்டுள்ளார். இதனை ஹேக்கர்கள் கவனித்து உள்ளனர். அவர்கள் உடனடியாக தங்களது வேலையில் இறங்கினர்.

இதன்பின்னர் சுனிலை தொடர்பு கொண்ட அவர்கள் ஒரு செயலியை பதிவிறக்கம் செய்யும்படி கூறியுள்ளனர். அவரும் அதேபோன்று செய்துள்ளார். இதனை தொடர்ந்து ஹேக்கர்கள் சுனிலின் வங்கி விவரங்களை பெற்று முதல் வேலையாக ரூ.2 ஆயிரம் பணபரிமாற்றம் செய்து பார்த்துள்ளனர். ஆனால், அது தோல்வியில் முடிந்துள்ளது.

இந்த முறை அவர்கள் ரூ.10 ஆயிரம் பணபரிமாற்றம் செய்துள்ளனர். இதனையடுத்து, சுனிலுக்கு எச்சரிக்கை தகவல் ஒன்று வந்துள்ளது. அதில், உங்களது வங்கி கணக்கில் ரூ.9,999.99 மட்டுமே உள்ளது என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனால், உஷாரான சுனில், நொய்டா போலீசின் சைபர் பிரிவை தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார்.

சுனிலின் வங்கி கணக்கில் ஒரு பைசா குறைவாக வைத்திருந்த நிலையில், இரு முறை அவர் ஹேக்கர்களின் சைபர் தாக்குதலில் இருந்து தப்பியுள்ளார். வங்கியில் இருந்த அவரது பணமும் தப்பியது.


Next Story