கோர்ட்டில் கவுனில் இருந்து தவறி விழுந்து, சுட்ட கைத்துப்பாக்கி; நீதிபதி காயம்
உத்தர பிரதேசத்தில் கோர்ட்டு வளாகத்தில் கவுனில் இருந்து தவறி விழுந்து, கைத்துப்பாக்கி சுட்டதில் நீதிபதி காயம் அடைந்து உள்ளார்.
மிர்சாப்பூர்,
உத்தர பிரதேசத்தின் மிர்சாப்பூர் நகரில் உள்ள கோர்ட்டு ஒன்றில் கூடுதல் மாவட்ட நீதிபதியாக பணியாற்றி வருபவர் தலேவார் சிங். இவர் கோர்ட்டு வளாகத்தில் இருந்த நீதிபதிகளுக்கான தனது அறையில் இன்று உடைமாற்றி கொண்டு இருந்துள்ளார்.
அப்போது, அவரது மேல் அங்கியில் வைத்திருந்த கைத்துப்பாக்கி தவறி கீழே விழுந்துள்ளது. அந்த துப்பாக்கி விழுந்த வேகத்தில் திடீரென சுட்டுள்ளது. இதில், அந்த துப்பாக்கி சுட்டதில் நீதிபதியின் காலில் காயம் ஏற்பட்டு உள்ளது.
கோர்ட்டு வளாகத்தில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டதும் வழக்கறிஞர்கள் மற்றும் வந்திருந்த மக்கள் அலறியடித்து ஓடினர். அதன்பின்பு, விவரம் தெரிந்து நீதிபதி அறைக்கு சென்றுள்ளனர்.
இதனை தொடர்ந்து, நீதிபதியை உடனடியாக மீட்டு, அருகேயுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அதன்பின், அவரது காலில் இருந்த துப்பாக்கி குண்டு நீக்கப்பட்டு, தேவையான சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்டது.
நீதிபதி ஆபத்து நிலையை கடந்து விட்டார். அதனால் பயப்பட வேண்டியதில்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர். உதவி போலீஸ் சூப்பிரெண்டு ஸ்ரீகாந்த் பிரஜாபதி கூறும்போது, நீதிபதியின் உரிமம் பெற்ற கைத்துப்பாக்கி, கவுன் அணியும்போது கீழே விழுந்து அவரது காலில் சுட்டுள்ளது.
அந்த துப்பாக்கி குண்டை மருத்துவர்கள் நீக்கி விட்டனர். தொடர்ந்து இதுபற்றி விசாரணை நடத்த இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.