சனாதன தர்மத்துக்கு எதிரான ஆ.ராசாவின் கருத்து, இந்துமத வெறுப்பை பிரதிபலிக்கிறது - மத்திய மந்திரி கண்டனம்


சனாதன தர்மத்துக்கு எதிரான ஆ.ராசாவின் கருத்து, இந்துமத வெறுப்பை பிரதிபலிக்கிறது - மத்திய மந்திரி கண்டனம்
x

சனாதன தர்மத்துக்கு எதிரான ஆ.ராசாவின் கருத்து, இந்தியா கூட்டணியின் இந்துமத வெறுப்பை பிரதிபலிப்பதாக தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

கடந்த 5 நாட்களாக, சனாதன தர்மத்துக்கு எதிராகவும், ஆதரவாகவும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே, முன்னாள் மத்திய மந்திரியும், தி.மு.க. எம்.பி.யுமான ஆ.ராசா, சனாதனத்தை விமர்சித்து இருந்தார். சனாதன தர்மத்தை எய்ட்ஸ், தொழுநோய் ஆகியவற்றுடன் அவர் ஒப்பிட்டதாக கூறப்படுகிறது.

சனாதன தர்மம், சமூக களங்கம் படிந்தது என்று அவர் கூறியதாக தெரிகிறது.

இந்நிலையில், அவரது கருத்துக்கு மத்திய மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவருமான தர்மேந்திர பிரதான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

சனாதன தர்மம் பற்றி மூர்க்கத்தனமான கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடவை ஆ.ராசா கூறியுள்ளார். அக்கருத்து, 'இந்தியா' கூட்டணியை பிடித்துள்ள மனநிலை வறட்சியையும், அக்கூட்டணியில் ஆழமாக வேரூன்றி உள்ள இந்துமத வெறுப்பையும் பிரதிபலிக்கிறது.

முடிவில்லாத சனாதனம்

பெயரை மாற்றுவதால், ஒருவரின் உள்நோக்கத்தையோ, குணத்தையோ மறைக்க முடியாது.

பாரதத்தின் ஆன்மா, உணர்வு மற்றும் வேர்களை காங்கிரஸ் கட்சியும், அதன் நண்பர்களும் எப்படி திட்டமிட்டு களங்கப்படுத்துகிறார்கள் என்பதை நாடு கவனித்துக் கொண்டிருக்கிறது.

சனாதனம் முடிவில்லாதது, உண்மையானது என்பதை இந்த வெறுப்பு பேச்சுக்காரர்களுக்கு நினைவுபடுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.


Next Story