கர்நாடக-மராட்டிய எல்லை வழக்கை கவனிக்க மூத்த மந்திரியை நியமிக்க வேண்டும்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு சித்தராமையா கடிதம்


கர்நாடக-மராட்டிய எல்லை வழக்கை கவனிக்க மூத்த மந்திரியை நியமிக்க வேண்டும்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு சித்தராமையா கடிதம்
x
தினத்தந்தி 23 Nov 2022 6:45 PM GMT (Updated: 23 Nov 2022 6:45 PM GMT)

கர்நாடகம்-மராட்டிய எல்லை வழக்கை கவனிக்க மூத்த மந்திரியை நியமிக்குமாறு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்.

பெங்களூரு:

மகிழ்ச்சி அளிக்கிறது

கர்நாடகம்-மராட்டியம் இடையே பெலகாவி எல்லை பிரச்சினை குறித்து எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவுக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கடிதம் எழுதினார். அந்த கடிதத்திற்கு சித்தராமையா பதில் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

பெலகாவி எல்லை பிரச்சினை குறித்து நீங்கள் எழுதிய கடிதம் எனக்கு கிடைத்தது. அதி முக்கிய விஷயமான இதுகுறித்து நீங்கள் தாமதமாவது எனக்கு கடிதம் எழுதி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கர்நாடகம்-மராட்டியம் எல்லை பிரச்சினையில் மராட்டிய மாநிலம் அதிக ஆர்வம் காட்டுவதாக நான் கருத்து தெரிவித்து, தலைவர்களின் கருத்துகளை கேட்க வேண்டும் என்று கூறினேன்.

சட்ட போராட்டம்

மராட்டிய மாநிலம் 16 பேர் அடங்கிய ஒரு ஆலோசனை குழுவை அமைத்துள்ளது. முதல்-மந்திரி தலைமையிலான அந்த குழு கூடி ஆலோசித்துள்ளது. சட்ட போராட்டத்தை தீவிரமாக நடத்துவது என்று அந்த குழு தீர்மானித்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் நடைபெறும் எல்லை விவகார வழக்கை கவனிக்க அந்த மாநிலம் 2 மந்திரிகளை நியமனம் செய்துள்ளது.

எல்லை விவகாரத்தில் மராட்டியம் காட்டும் ஆர்வத்தை கர்நாடகம் காட்டவில்லை என்பது வருத்தம் அளிப்பதாக உள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் இன்று (நேற்று) வழக்கு விசாரணைக்கு வருகிறது என்றாலும், அதுபற்றி எதிர்க்கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தவில்லை. இதன் மூலம் இந்த எல்லை விவகாரத்தை கர்நாடக அரசு தீவிரமாக எடுத்து கொள்ளவில்லை என்பது தெளிவாகிறது.

உறுதியாக இருக்க வேண்டும்

மத்திய அரசால் நியமிக்கப்பட்ட மகாஜன் ஆணைய அறிக்கையே இறுதியானது. அந்த ஆணைய அறிக்கையின் பரிந்துரையை கர்நாடகம் ஏற்று கொள்கிறது. அதை தவிர்த்து வேறு எந்த மாற்றத்தையும் கர்நாடகம் ஒப்புக்கொள்ளாது. இது தான் கர்நாடகத்தில் இதுவரை ஆட்சி செய்த அனைத்து அரசுகளின் நிலைப்பாடாக இருந்துள்ளது.

பெலகாவியில் மராட்டிய எல்லையில் உள்ள 865 கிராமங்களை மராட்டியத்தில் சேர்க்குமாறு கோரி அம்மாநிலம் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என கர்நாடக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த முடிவில் கர்நாடகம் உறுதியாக இருக்க வேண்டும் என்பது எனது கோரிக்கை ஆகும்.

ஆலோசனை குழு

கர்நாடக அரசு உடனடியாக எதிர்க்கட்சி தலைவர்களையும் உள்ளடக்கி ஆலோசனை குழுவை அமைக்க வேண்டும். இந்த வழக்கை கவனிக்க ஒரு மூத்த மந்திரியை நியமிக்க வேண்டும். கர்நாடக எல்லை பாதுகாப்பு குழுவை மறுசீரமைக்க வேண்டும்.

இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.


Next Story