விபத்தில் சிக்கி கால் முறிந்தது ஆம்புலன்சில் படுத்தபடி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவி
விபத்தில் சிக்கி கால்முறிந்த நிலையிலும் மாணவி ஒருவர் ஆம்புலன்சில் படுத்தபடி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதிய நெகிழ்ச்சி சம்பவம் மும்பையில் நடந்து உள்ளது.
மும்பை,
விபத்தில் சிக்கி கால்முறிந்த நிலையிலும் மாணவி ஒருவர் ஆம்புலன்சில் படுத்தபடி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதிய நெகிழ்ச்சி சம்பவம் மும்பையில் நடந்து உள்ளது.
மும்பையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரும் மாணவி முபாஷிரா சாதிக் செய்யது. மாணவி தற்போது 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி வருகிறார். பாந்திராவில் உள்ள ஸ்டானிஸ்லாஸ் பள்ளியில் மாணவிக்கு தேர்வறை ஒதுக்கப்பட்டு உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை தேர்வு முடிந்து மாணவி வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார்.
பாந்திரா ஹில்ரோட்டில் சாலையை கடந்த போது அந்த வழியாக சென்ற கார் மாணவியின் இடது காலில் ஏறியது. இந்த விபத்தில் மாணவியின் கால் முறிந்தது.
உடனடியாக கார் டிரைவர் உள்ளிட்டவர்கள் மாணவியை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. காலில் அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை மாணவி ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினார். அதே நேரத்தில் டாக்டர்கள் மாணவியை 2 வாரங்களுக்கு ஓய்வு எடுக்க அறிவுறுத்தினர்.
எனினும் மாணவி பொதுத்தேர்வு எழுதுவதில் உறுதியாக இருந்தார். கால் வலி காரணமாக மாணவியால் தேர்வு எழுத முடியாத நிலை இருந்தது. மாணவியின் நிலையை உணர்ந்து கொண்ட அவர் படிக்கும் பள்ளி நிர்வாகம் அவருக்கு தேர்வு எழுத சிறப்பு அனுமதி கேட்டது. கல்வி வாரியமும் உடனடியாக அனுமதி வழங்கியது.
இதன் காரணமாக மாணவி நேற்று முன்தினம் ஆம்புலன்சில் படுத்து இருந்தபடி அறிவியல் 2-ம் தாள் தேர்வை எழுதினார். மாணவி முபாஷிரா விடைகளை சொல்ல, சொல்ல அவர் படிக்கும் பள்ளியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி நூர்சாபா அன்சாரி தேர்வு எழுதினார்.
இதுகுறித்து ஆம்புலன்சில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட ஸ்டானிஸ்லாஸ் பள்ளி முதல்வர் ஆரோக்கியம்மாள் அந்ேதாணி கூறுகையில், "ஆம்புலன்சில் தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டது புதுவித அனுபவமாக இருந்தது. பொதுவாக ஆம்புலன்ஸ் எதிர்மறையாக கருதப்படும். ஆனால் மாணவியின் கையில் வினாத்தாள் கிடைத்தவுடன் அவர் நேர்மறை எண்ணத்துடன் நம்பிக்கையுடன் இருந்ததை கவனித்தேன்" என்றார்.