ஆங்கிலத்தில் 350 கவிதை புத்தகங்களை எழுதி வெளியிட்ட தமிழ் மாணவி


ஆங்கிலத்தில் 350 கவிதை புத்தகங்களை எழுதி வெளியிட்ட தமிழ் மாணவி
x
தினத்தந்தி 31 July 2023 9:34 PM GMT (Updated: 31 July 2023 9:35 PM GMT)

இந்திய தலைவர்கள் குறித்து ஆங்கிலத்தில் 350-க்கும் மேற்பட்ட கவிதைகளை எழுதி புத்தகமாக வெளியிட்ட தமிழ் மாணவிக்கு பாராட்டுகள் மற்றும் விருதுகள் வாங்கி குவித்து வருகிறார்.

கோலார் தங்கவயல்:-

தமிழ் மாணவி

கோலார் தங்கவயல் மாரிக்குப்பம் நார்த் கில்பர்ட்ஸ் பகுதியை சேர்ந்தவர் குரல்மி, ரேவதி தம்பதி. இவரது மகள் ஷாருலதா. சிறு வயது முதலே இவருக்கு தமிழ் மீது ஆர்வம் அதிகம். இதனால் தமிழை முதல் மொழி பாடமாக எடுத்து படித்து வந்தார். இவர் தமிழ் மீது கொண்ட பற்றால், கவிதைகள் எழுத தொடங்கினார். இதற்கு பாராட்டுகளும் மாணவிக்கு குவிந்தது.

இந்நிலையில் பெற்றோர் ஷாருலதாவை உயர்நிலைப்பள்ளியில் ஆங்கில மொழியில் கல்வி கற்கும் பாடத்திட்டத்தில் சேர்ந்தனர். சாம்பியன் ரீப் பகுதியில் உள்ள தூய மரியன்னை பள்ளியில் ஆங்கில மொழி வழி கல்வி பாடத்திட்டத்தில் படித்தார். இதையடுத்து ஷாருலதாவிற்கு தமிழ் மட்டுமின்றி ஆங்கில மொழியிலும் கவிதைகள் எழுதும் திறமையை வளர்த்தார்.

ஆங்கில மொழியில் கவிதை

இதனால் ஆங்கில மொழியில் கவிதைகள் எழுதுவதில் அதிகளவு ஆர்வம் காட்டினார். 8-ம் வகுப்பில் முதன் முறையாக ஆங்கில மொழியில் சமூக சிந்தனை தொடர்பான கவிதைகளை எழுத தொடங்கினார். இவரது ஆங்கில திறனை பார்த்து மாவட்ட அளவில், சிறந்த ஆங்கில கவிஞர் என்ற பட்டம் வழங்கப்பட்டது. இந்த பட்டத்தை அப்போதைய மாவட்ட கலெக்டர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் வழங்கினர்.

மேலும் ''கம் அவுட்'' என்ற பெயரில் ஆங்கில கவிதை புத்தகம் ஒன்றை எழுதினாா். பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த ஆங்கில பேராசிரியர்கள், இந்த புத்தகத்தை வெளியிட்டனர். இது ஷாருலதாவிற்கு கூடுதல் பெருமையை சேர்த்தது.

இதையடுத்து ஷாருலதா பி.இ.எம்.எல்.நகரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.யூ.சி படிப்பை தொடர்ந்தார்.

''கோல்டன் ரூல்ஸ்''

கல்லூரி பாடத்துடன் தனது ஆங்கில கவிதையை எழுதும் திறனை மேலும் வளர்த்து கொண்டார். இயற்கை, கல்வி, சுற்றுச்சூழல், வனப்பாதுகாப்பு உள்பட பல்வேறு தலைப்புகளில் கவிதைகள் எழுத தொடங்கினார். பி.யூ.சி. படிக்கும்போது ஷாருலதா எழுதிய ''கோல்டன் ரூல்ஸ்'' என்ற ஆங்கில கவிதை புத்தகம் பெரும் வரவேற்பை பெற்றது. அப்போது முதல்-மந்திரியாக பரமேஸ்வர் இருந்தார். அவர் இந்த புத்தகத்தை அறிமுகம் செய்து வைத்தார். இந்த புத்தகம் ஷாருலதாவிற்கு பாராட்டுகளை குவித்தது. விருதுகளும் கிடைத்தது.

இதையடுத்து ஷாருலதா கோலார் தங்கவயலில் பி.யூ.சி. படிப்பை முடித்துவிட்டு பெங்களூரு மகாராணி கல்லூரியில் பட்டப்படிப்பை தொடர்ந்தார். படிப்பில் ஆர்வமாக செயல்பட்ட ஷாருலதா கவிதை எழுதும் ஆர்வத்தை விடவில்லை. நேரம் கிடைக்கும்போது ஆங்கிலத்தில் கவிதை எழுதுவதை தொடர்ந்தார்.

இணையதளத்தில் வெளியான கவிதை

அதன்படி பல நாள் உழைப்பின் பலனாக ''அனஸ்தீசியா'' என்ற ஆங்கில கவிதை புத்தகத்தை எழுதினார். இந்த புத்தகத்தை சென்னையை சேர்ந்த கிளவர் பாக்ஸ் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் அமேசான் இணையதளத்தில் வெளியிட்டனர். இது இணையதள வாசர்களை மிகவும் கவர்ந்தது. இந்த புத்தகத்திற்கும் ஷாருலதாவிற்கு பாராட்டுகள், விருதுகள் கிடைத்தது. இதையடுத்து சமூக வளர்ச்சி உள்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து பொது மேடைகளில் ஆங்கிலத்தில் கவிதையாக பேச தொடங்கினார்.

இவரது பேச்சை பலரும் கேட்க தொடங்கினர். இதற்கிடையில் சென்னையில் சில மாதங்களுக்கு முன்பு ஐ.ஐ.டி.வளாகத்தில் ஜி20 பிரதிநிதிகள் மாநாட்டில் ஷாருலதா கலந்து கொண்டு உரையாற்றினார். இதையடுத்து இந்திய பீஸ் பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில் ஷாருலதாவுக்கு இளம் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

பாராட்டுகள், கேடயங்கள் குவிப்பு

இதேபோல பெங்களூருவில் நடந்த மாநில அளவிலான சர்வதேச பேச்சு போட்டியில் ஷாருலதா முதல் இடம் பிடித்தார். இதேபோல 350-க்கும் அதிகமான சமூக சிந்தனைகளை தூண்டும் ஆங்கில மொழி கவிதைகளை புத்தகமாக எழுதி ஷாருலதா வெளியிட்டுள்ளார். இதற்கு கர்நாடக மட்டுமின்றி வெளி மாநிலத்தில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இதற்காக பல பரிசுகள், பாராட்டுகள், விருதுகள் ஷாருலதாவிற்கு கிடைத்திருக்கிறது. ஒரு தமிழ் மாணவி, ஆங்கிலத்தில் கவிதை எழுதி சாதித்திருப்பது அனைத்து தமிழர்களுக்கும் பெருமை அளிக்கும் வண்ணம் உள்ளது என்று பலரும் பெருமை பாராட்டி வருகின்றனர்.


Next Story