இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 23-01-2026

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 23 Jan 2026 2:26 PM IST
மேடையில் மாம்பழம் சின்னம்: அன்புமணி விளக்கம்
மாம்பழம் சின்னத்தை நாங்கள் பயன்படுத்த தேர்தல் ஆணையம் எங்களுக்கு அதிகாரம் தந்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி மேடையில் மாம்பழம் சின்னம் இருந்ததற்கு ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அன்புமணி விளக்கம் அளித்துள்ளார். மதுராந்தகம் பொதுக்கூட்டம் திமுகவிற்கு பயத்தை ஏற்படுத்தி உள்ளது. வரும் தேர்தலில் திமுக வேண்டாம் என்பதில் தமிழக மக்கள் உறுதியாக உள்ளதாக அன்புமணி ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
- 23 Jan 2026 2:21 PM IST
பிரதமர் மோடியின் சென்னை வருகை தாமதம்
மதுராந்தகத்தில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க வரும் பிரதமர் மோடியின் பயணம் தாமதமாகும் என தகவல் வெளியாகி உள்ளது. திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை விமானம் மூலம் 2.15 மணிக்கு பிரதமர் மோடி சென்னைக்கு வர விருந்தநிலையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மதியம் 2.15க்கு பதிலாக 2.41க்கு மணியளவில் பிரதமர் மோடி சென்னை விமான நிலையம் வரவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
- 23 Jan 2026 1:49 PM IST
சென்னை உட்பட 7 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை ஆகிய 7 மாவட்டங்களில் நாளை (சனிக் கிழமை) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
- 23 Jan 2026 1:27 PM IST
6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் ஆகிய 6 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று (வெள்ளிக் கிழமை) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
- 23 Jan 2026 1:18 PM IST
ஜல்லிக்கட்டு போட்டி: ஆன்லைன் பதிவு முறையில் மாற்றம்
உள்ளூர் காளைகளும், வீரர்களும் பங்குபெறுவதை உறுதி செய்திட ஆன்லைன் பதிவு முறை மாற்றம் செய்யப்பட உள்ளது. மேலும் மாவட்ட அளவில் முடிவு செய்துகொள்ள வழிவகை செய்யப்படும் என்றும், மாடுபிடி வீரர்களுக்கு ஆயுள் காப்பீடு கட்டாயம் என்ற விதி தளர்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போட்டியின் போது இறக்க நேரிடும் மாடுபிடி வீரர்களுக்கு உரிய நிவாரணத்தை அரசு வழங்குகிறது என்றும், ஜல்லிக்கட்டு போட்டி நடத்துபவர்களிடம் முத்திரைத் தாளில் உறுதிமொழி என்ற நடைமுறை ரத்து செய்யப்படுவதாகவும், ஜல்லிக்கட்டை தொடர்ந்து ஊக்குவித்திட முதல்-அமைச்சர் வழிகாட்டுதலில் செயல்படுவோம் என்றும் தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 23 Jan 2026 1:08 PM IST
ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்னென்ன..?
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.
- 23 Jan 2026 1:06 PM IST
தை முடிவதற்குள் உரிய பதில் - ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பிறகு முடிவு எடுக்கப்படும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
- 23 Jan 2026 12:30 PM IST
அம்ரித் பாரத் ரெயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
தென்னக ரெயில்வேயில் திருவனந்தபுரத்தில் இருந்து மதுரை வழியாக தாம்பரத்துக்கு புதிய வாராந்திர அம்ரித் பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளது. வந்தே பாரத் போன்று நவீன வசதிகளை கொண்ட, அதே நேரத்தில் ஏ.சி. வசதி இல்லாத ‘அம்ரித் பாரத்’ ரெயில் உருவாக்கப்பட்டு உள்ளது. நாகர்கோவிலில் இருந்து நெல்லை, மதுரை, பழனி, கோவை, சேலம் வழியாக மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் சுற்றுலா தலம் அருகே உள்ள நியு ஜல்பைகுரி நகருக்கு ஒரு அம்ரித் பாரத் ரெயில் கடந்த வாரம் போக்குவரத்தை தொடங்கி உள்ளது.
இந்த சூழலில் திருவனந்தபுரம் சென்டிரலில் இருந்து நெல்லை வழியாக தாம்பரத்துக்கு மேலும் ஒரு அம்ரித் பாரத் வாராந்திர ரெயில் (வண்டி எண் 16121 / 16122) இயக்கப்படுகிறது.
இந்நிலையில் திருவனந்தபுரம் சென்டிரல் ரெயில் நிலையத்தில் இன்று காலை நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி திருவனந்தபுரம்- தாம்பரம் அம்ரித் பாரத் அறிமுக ரெயில் உள்ளிட்ட ரெயில்களின் போக்குவரத்தை தொடங்கி வைத்தார்.
இந்த ரெயில் குழித்துறை, நாகர்கோவில் டவுன், வள்ளியூர் வழியாக நெல்லை சந்திப்புக்கு மதியம் 1.20 மணிக்கு வந்து 1.25 மணிக்கு புறப்படுகிறது. தொடர்ந்து கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக தாம்பரத்துக்கு இரவு 11.45 மணிக்கு வந்தடைகிறது.
- 23 Jan 2026 11:47 AM IST
திருவண்ணாமலையில் விமான நிலையம் அமையுமா..? - அமைச்சர் சிவசங்கர் பதில்
கீழ்பென்னாத்தூர் தொகுதியில் ஒரு போக்குவரத்து பணிமனை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
- 23 Jan 2026 11:38 AM IST
திருப்பரங்குன்றம் வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலை தொல்லியல் துறையிடம் ஆய்வுக்கு ஒப்படைக்கக் கோரிய வழக்கில் மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு பதிலளிக்க சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக இந்து தர்ம பரிஷத் பெயரில் மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இதுதொடர்பான அந்த மனுவில், திருப்பரங்குன்றம் கோவிலிலிருந்து இந்து சமய அறநிலையத் துறை வெளியேற வேண்டும் என்றும், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் நிரந்தரமாக தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
















