அமெரிக்க விசா கிடைத்த மகிழ்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த வாலிபர்


அமெரிக்க விசா கிடைத்த மகிழ்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த வாலிபர்
x

பஞ்சாப்பில், அமெரிக்க விசா கிடைத்த மகிழ்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு வாலிபர் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நடந்து உள்ளது.



லெஹ்ராககா,


பஞ்சாப்பின் லெஹ்ராககா பகுதியை சேர்ந்தவர் சுக்செயின் சிங். இவரது மகன் ரஞ்சோத் சிங் (வயது 20). இவர் அமெரிக்காவில் தங்கி படிப்பதற்கு விரும்பியுள்ளார்.

இதற்கான விசா பெறுவதற்கான நேர்காணலில் பங்கேற்று அதில் வெற்றியும் பெற்றுள்ளார். வருகிற 24-ந்தேதி அமெரிக்காவுக்கு பறந்து செல்ல தயாரானார். இதனால், தனது நண்பர்களுக்கு விருந்து கொடுத்து உள்ளார்.

அதன்பின்பு, பாட்டியாலா நகரில் ஷாப்பிங் செய்ய சென்றுள்ளார். ஆனால், அதுவே அவரது கடைசியான பயணம் ஆக அமைந்து விட்டது. அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது.

உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், ரஞ்சோத் உயிரிழந்து விட்டார் என டாக்டர் கூறியுள்ளார். அதிக மகிழ்ச்சியை அவரால் ஏற்று கொள்ள முடியவில்லை. அதனால், மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது. ஆயிரம் பேரில் ஒரு சதவீதம் என்ற அடிப்படையில் இது ஏற்பட்டு உள்ளது என அவர் கூறியுள்ளார்.

சமீப காலங்களாக இளைஞர்களிடையே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவது அதிகரித்து உள்ளது. சமீபத்தில் அவதார் 2-ம் பாகம் பார்க்க சென்ற லட்சுமிரெட்டி ஸ்ரீனு என்பவர் ஆந்திர பிரதேசத்தின் காக்கிநாடா மாவட்டத்தில் பெட்டாபுரம் பகுதியில், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து உள்ளார்.

அவரது இளைய சகோதரர் ராஜூ உடனடியாக பெட்டாபுரம் அரசு மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றும் பலனின்றி அவர் உயிரிழந்து விட்டார்.

இந்தியாவில், மேற்கத்திய நாடுகளை விட 2 முதல் 3 மடங்கு இருதய வியாதிகள் பாதிக்க கூடிய ஆபத்து அதிகம் காணப்படுகிறது என சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்த சூழலில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன.


Next Story