பணத்தகராறில் வாலிபர் கல்லால் தாக்கி கொலை


பணத்தகராறில் வாலிபர் கல்லால் தாக்கி கொலை
x
தினத்தந்தி 21 Nov 2022 6:45 PM GMT (Updated: 21 Nov 2022 6:46 PM GMT)

தரிகெரே டவுனில் பணத்தகராறில் வாலிபர் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டார். இதுபற்றி அறிந்த அவரது பெரியப்பா மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சிக்கமகளூரு:-

பணத்தகராறில் கொலை

சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரே டவுன் ஏ.பி.எம்.சி அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் ஓம்கார்(வயது 30). அதே பகுதியை சேர்ந்தவர்கள் தன்ராஜ்(வயது 28), விஜய்(30), சுனில்(27). இவர்கள் 3 பேருக்கும், ஓம்காராவிற்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இதுதொடர்பாக பேசவேண்டும் என்று கூறி, ஓம்காராவை, அவர்கள் 3 பேரும் அழைத்துள்ளனர். இதை நம்பி ஓம்கார் அங்கு சென்றார்.

அப்போது அவர்கள் 3 பேர் மட்டுமின்றி மேலும் 2 பேர் சேர்ந்து ஓம்காரை ஏ.பி.எம்.சி. வளாகத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவருடன் தகராறில் ஈடுபட்ட கும்பல் பின்னர் சரமாரியாக தாக்கினர். மேலும் ஓம்காரை கல்லால் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் தலைப்பகுதியில் பலத்த காயமடைந்த ஓம்கார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில் குடும்பத்தினர் ஓம்காரை தேடி வந்தனர். நேற்று காலை ஏ.பி.எம்.சி. வளாகம் அருகே சென்ற பொதுமக்கள் ஓம்காரின் உடலை பார்த்து தரிகெரே போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

3 பேர் கைது

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், ஓம்கார் கொலை செய்யப்பட்டிருப்பதாக தெரியவந்தது. இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் தன்ராஜ், விஜய், சுனில் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து ஓம்காரின் பெரியப்பாவான பிரகாஷ்(வயது 55) என்பவர் மாரடைப்பால் உயிரிழந்தார். ஓம்கார் கொலை செய்யப்பட்டது குறித்து தகவல் கிடைத்ததும், பிரகாஷ் அதிர்ச்சியில் மாரடைப்பால் இறந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் ஓம்காரின் குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கினர்.


Next Story