சரியான நேரத்தில் தாயிடம் இருந்து வந்த அழைப்பு... பெங்களூரு குண்டுவெடிப்பில் இருந்து தப்பித்த இளைஞர்


சரியான நேரத்தில் தாயிடம் இருந்து வந்த அழைப்பு... பெங்களூரு குண்டுவெடிப்பில் இருந்து தப்பித்த இளைஞர்
x

தனது தாயிடம் இருந்து வந்த அழைப்புதான் தன்னை குண்டுவெடிப்பில் இருந்து காப்பாற்றியதாக குமார் அலங்கிரித் கூறியுள்ளார்.

பெங்களூரு,

பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்தவர் எஞ்சினீயரிங் பட்டதாரியான குமார் அலங்கிரித். இவர் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் தனது அலுவலகத்தின் அருகில் உள்ள பிரபல ராமேஸ்வரம் கபே உணவகத்தில் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில் நேற்றைய தினம் வழக்கம்போல் குமார் அலங்கிரித், ராமேஸ்வரம் கபே உணவகத்திற்கு சாப்பிடுவதற்காக சென்றுள்ளார். உணவை ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்த சமயத்தில், அவரது தாயிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.

அதனை எடுத்து அவர் பேசுகையில், சரியாக சிக்னல் கிடைக்கவில்லை என்றும், சற்று வெளியே வந்து பேசுமாறும் குமாரின் தாய் கூறியுள்ளார். இதையடுத்து குமார் உணவகத்தை விட்டு வெளியே வந்துள்ளார். அவர் வெளியே வந்த சில வினாடிகளில் பயங்கர சத்தத்துடன் உணவகத்திற்குள் குண்டு வெடித்துள்ளது.

முதலில் உணவகத்தில் இருந்த சிலிண்டர் வெடித்துவிட்டது என்று எல்லோரும் நினைத்ததாகவும், அதன் பின்னரே அங்கு குண்டுவெடிப்பு நிகழ்ந்தது தெரியவந்ததாகவும் குமார் அலங்கிரித் கூறியுள்ளார். மேலும் உணவகத்தில் இருந்தவர்களுக்கு மிகவும் மோசமான காயங்கள் ஏற்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய குமார் அலங்கிரித், தனது தாயிடம் இருந்து வந்த அழைப்புதான் தன்னை குண்டுவெடிப்பில் இருந்து காப்பாற்றியதாகவும், தாய்மார்கள் கடவுளுக்கு சமமானவர்கள் என்பது நேற்றைய சம்பவத்தின் மூலம் நிரூபணம் ஆகியுள்ளதாகவும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.


Next Story