வயநாட்டில் புகைப்படம் எடுக்க முயன்றபோது தமிழக சுற்றுலா பயணியை ஓட ஓட விரட்டிய காட்டுயானை மயிரிழையில் உயிர் தப்பினார்


வயநாட்டில் புகைப்படம் எடுக்க முயன்றபோது தமிழக சுற்றுலா பயணியை ஓட ஓட விரட்டிய காட்டுயானை மயிரிழையில் உயிர் தப்பினார்
x
தினத்தந்தி 8 Jun 2023 10:15 PM GMT (Updated: 8 Jun 2023 10:15 PM GMT)

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் முத்தங்கா என்ற வனப்பகுதி உள்ளது.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் முத்தங்கா என்ற வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியை சுற்றுப்பார்க்க தமிழ்நாட்டில் உள்ள சென்னையை சேர்ந்த 4 பேர் கொண்ட ஒரு குழுவினர் சென்றனர். அவர்கள் வனப்பகுதிகுள் வாகனத்தில் சென்றபோது தூரத்தில் ஒரு காட்டு யானை நிற்பதை அவர்கள் கண்டனர்.

இதைக்கண்ட அந்த குழுவில் இருந்த ஒரு பயணி ஆர்வமிகுதியில் திடீரென வாகனத்தை விட்டு கீழே இறங்கி காட்டுயானையின் அருகில் சென்று புகைப்படம் எடுக்க முயன்றார். அப்போது, ஆக்ரோஷமான யானை அந்த பயணியை ஓட... ஓட விரட்டத் தொடங்கியது. இதனால், அதிர்ச்சி அடைந்த அவர் மரண பயத்தில் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தார். வாகனத்தில் இருந்த குழுவினர்கள் இதை கண்டு செய்வதறியாது அலறினார்கள். அப்படி அந்த பயணி ஓடியபோது நிலைதடுமாறி விழுந்தார். பின்னர், மீண்டும் ஓட்டம் பிடித்தார்.

அந்த நேரத்தில் வயநாடு வனக்காவலர் வாகனத்தில் அங்கு வந்தனர். விபரீதத்தை புரிந்து கொண்ட அவர்கள் சைரன் ஒலியை எழுப்பியபடி அந்த பயணியை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். அந்த சத்தத்தை கேட்ட யானை வனப்பகுதிக்குள் திரும்பிச் சென்றது. இதனால், அந்த பயணி மயிரிழையில் உயிர் தப்பினார்.

இந்தநிலையில், வன விலங்குகளுக்கு இடையூறு செய்ததாக தமிழக சுற்றுலா பயணிக்கு ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்த வனத்துறையினர் அவர்களுக்கு அறிவுரை கூறி எச்சரித்து அனுப்பினர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


Next Story