மூடிகெரே போலீஸ் நிலையத்தில் பெண் தற்கொலை முயற்சி
கோர்ட்டு சம்மன் அனுப்பிய நிலையில் போலீஸ் நிலையத்துக்கு வந்து பெண் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் நடந்துள்ளது.
சிக்கமகளூரு-
கோர்ட்டு சம்மன் அனுப்பிய நிலையில் போலீஸ் நிலையத்துக்கு வந்து பெண் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் நடந்துள்ளது.
குடும்ப தகராறு
சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா பிலகுலா பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி. இந்தநிலையில் லட்சுமிக்கும், அவரது சகோதரிக்கும் கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் தகராறு ஏற்பட்டது. இதுதொடர்பாக லட்சுமி மீது சகோதரி மூடிகெரே போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். மூடிகெரே போலீசார் லட்சுமியை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று அறிவுரை கூறியுள்ளனர்.
அப்போது அங்கு பணியில் இருந்த பெண் போலீசை, லட்சுமி அடித்துள்ளார். மேலும் போலீசாரை பணி செய்யவிடாமல் லட்சுமி தடுத்து உள்ளார். இதுகுறித்து மூடிகெரே போலீசார் லட்சுமி மீது வழக்குப்பதிவு செய்தனர். இதுகுறித்து பெண் போலீசார் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதுதொடர்பான வழக்கு மூடிகெரே கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்தநிலையில் லட்சுமிக்கு, மூடிகெரே கோர்ட்டு பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் கோர்ட்டில் ஆஜராகவில்லை. இந்தநிலையில் மீண்டும் கோர்ட்டு, லட்சுமிக்கு சம்மன் அனுப்பியது. அந்த சம்மனை எடுத்து கொண்டு லட்சுமி மூடிகெரே போலீஸ் நிலையத்திற்கு வந்தார். பின்னர் அவர் போலீஸ் நிலையத்திற்கு சென்றார்.
தற்கொலை முயற்சி
இதையடுத்து லட்சுமி திடீரென்று மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சித்தார். அப்போது பணியில் இருந்த போலீசார் அவரை மீட்டு சமாதானப்படுத்தினர். இதையடுத்து லட்சுமி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது லட்சுமி நான் என்ன செய்தேன், எனக்கு எதற்கு கோர்ட்டு சம்மன் அனுப்புகிறது என கூறினார். இதையடுத்து அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜராகும் படி தெரிவித்தனர். பின்னர் லட்சுமி அங்கிருந்து சென்றார். மூடிகெரே போலீஸ் நிலையத்தின் மாடியில் பெண் ஒருவர் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.