பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி உடலை தானம் செய்த பெண்
பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி பெண் ஒருவர் உடலை தானம் செய்தார்.
பெங்களூரு:
பிரதமர் மோடியின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. அவரது பிறந்தநாளை 2 வாரத்திற்கு கொண்டாட பா.ஜனதாவினர் ஏற்பாடு செய்துள்ளனர். இந்த நிலையில் கர்நாடக மாநிலம் உடுப்பியை சேர்ந்த ஷில்பா சலியன் என்பவர் பிரதமரின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக தனது உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு முன்வந்துள்ளார். இவர் பிரதமரின் தீவிர ரசிகை என்பது தெரியவந்துள்ளது. இவர் மணிப்பால் கே.எம்.சி. ஆஸ்பத்திரியில் தனது உடலை தானம் செய்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, பெற்றோர் மற்றும் கணவரின் ஒப்புதல் கடிதத்தையும் வழங்கி உள்ளார்.
பின்னர் அவர் கூறுகையில், நான் பிரதமர் மோடியின் தீவிர ரசிகை. அவர் நாட்டிற்காக தனது வாழ்க்கையை தியாகம் செய்துவிட்டார். அவரை போல் வேறு யாரும் இனி வரப்போவது கிடையாது. இறந்த பிறகு நமது உடலை மண் தான் சாப்பிடுகிறது. அதை மாற்றும் நோக்கில், நான் எனது உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்துள்ளேன். இதன் மூலம் 4 பேருக்கு மறுவாழ்வு கிடைக்கும். மேலும், மருத்துவ மாணவர்களின் கல்விக்கு அவை பயன்படும் என்றார்.