பெங்களூரு வந்த இண்டிகோ விமான கழிவறையில் சிகரெட் பிடித்த இளம்பெண்ணால் பரபரப்பு


பெங்களூரு வந்த இண்டிகோ விமான கழிவறையில் சிகரெட் பிடித்த இளம்பெண்ணால் பரபரப்பு
x
தினத்தந்தி 9 March 2023 3:41 AM GMT (Updated: 9 March 2023 5:23 AM GMT)

கொல்கத்தாவில் இருந்து பெங்களூரு வந்த இண்டிகோ விமானத்தின் கழிவறையில் சிகரெட் பிடித்த இளம்பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

பெங்களூரு,

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் இருந்து பெங்களூரு நோக்கி 6இ 716 என்ற எண் கொண்ட இண்டிகோ விமானம் ஒன்று வந்து கொண்டு இருந்து உள்ளது. விமானம் தரையிறங்க 30 நிமிடங்கள் இருக்கும்போது, விமான கழிவறையை ஊழியர் சோதனை செய்து உள்ளார்.

அப்போது, குப்பை தொட்டியில் சிகரெட் துண்டு ஒன்று எரிந்த நிலையில் கிடந்து உள்ளது கண்டறியப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக உடனடியாக தண்ணீர் ஊற்றி அதனை ஊழியர் அணைத்து உள்ளார்.

கொல்கத்தாவின் சீல்டா பகுதியை சேர்ந்த பிரியங்கா சக்ரவர்த்தி என்ற 24 வயது இளம்பெண் விமானத்தின் கழிவறையில் புகைப்பிடித்த பின் எரிந்த நிலையிலான மீதமுள்ள சிகரெட் துண்டை போட்டு போயுள்ளார் என கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து பெங்களூரு கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு இண்டிகோ விமானம் வந்து இறங்கியதும் பிரியங்காவை போலீசிடம் ஒப்படைத்து உள்ளனர்.

விமானத்தில் பிற பயணிகள் உள்ளிட்டோரின் வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட பாதுகாப்புக்கு ஆபத்து விளைவித்து உள்ளார் என்ற குற்றச்சாட்டின் பேரில் போலீசார் வழக்கு ஒன்றை பதிவு செய்து உள்ளனர். அதன்பின்னர், அந்த இளம்பெண்ணை காவலுக்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவம் பற்றி முழு அளவில் விசாரணையும் நடந்து வருகிறது.

கடந்த ஆண்டு நவம்பரில் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் ஆடவர் ஒருவர், குடிபோதையில் சக பெண் பயணி ஒருவர் மீது சிறுநீர் கழித்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டது. சங்கர் மிஷ்ரா என்ற அந்த நபர் கைது செய்யப்பட்டார்.

இதனை தொடர்ந்து, ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. விமானியின் லைசென்ஸ் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஏர் இந்தியா நிறுவனம் விமான பயணிகளுக்கான விதிகளை கடுமையாக்கி உள்ளது.


Next Story