டெல்லி மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் காங்கிரஸ்..!! ஆம் ஆத்மி கட்சி அதிருப்தி


டெல்லி மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் காங்கிரஸ்..!! ஆம் ஆத்மி கட்சி அதிருப்தி
x

டெல்லி மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் முடிவுக்கு ஆம் ஆத்மி கட்சி அதிருப்தி தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு டெல்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளிலும் ஆயத்தப் பணிகளைத் தொடங்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ராகுல் காந்தி தலைமையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் அல்கா லம்பா, "வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும்படி நாங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளோம். 7 தொகுதிகளிலும் ஆயத்தப் பணிகளைத் தொடங்குவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் 7 மாதங்கள் உள்ளன. தேர்தலுக்கு தயாராகும்படி கட்சித் தொண்டர்கள் அனைவரும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

எத்தனை இடங்களில் போட்டியிடுவது என்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும். 7 தொகுதிகளிலும் முழு பலத்துடன் தயாராகும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரைக்குப் பிறகு மக்கள் காங்கிரசை பார்க்கும் விதத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை காண்கிறோம். 4 மணிநேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் 40 தலைவர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்தை தெரிவித்தனர். டெல்லியில் காங்கிரசை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது" என்று அவர் தெரிவித்தார்.

அல்கா லம்பாவின் இந்த கருத்துக்கு ஆம் ஆத்மி கட்சியில் இருந்து கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பாளர் பிரியங்கா கக்கர் கூறுகையில், "டெல்லியில் எங்களுடன் கூட்டணிக்கு வரப்போவதில்லை என்று காங்கிரஸ் முடிவெடுத்திருந்தால், இந்தியக் கூட்டணிக் கூட்டத்தில் கலந்து கொண்டு நேரத்தை வீணடிப்பதில் அர்த்தமில்லை. அடுத்த கூட்டத்தில் நாங்கள் பங்கேற்பது குறித்து எங்கள் தலைமை இறுதி முடிவு எடுக்கும்" என்று அவர் தெரிவித்தார்.

மேலும் இது தொடர்பாக ஆம் ஆத்மி அமைச்சர் சவுரப் பரத்வாஜ் கூறுகையில், "எங்கள் மத்திய தலைமை இதை முடிவு செய்யும்... எங்கள் அரசியல் விவகாரக் குழுவும் இந்தியக் கட்சிகளும் ஒன்றாக அமர்ந்து விவாதிக்கும்" என்று அவர் கூறினார்.


Next Story