'ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி' - காஷ்மீர் எம்.பி. பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை ஏற்றுக்கொண்டு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு காஷ்மீர் எம்.பி.க்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
டெல்லி,
ஜம்மு-காஷ்மீருக்குசிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டம் 370-ஐ மத்திய அரசு கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி ரத்து செய்தது. மேலும், ஜம்மு-காஷ்மீரை இரண்டாக பிரித்து ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.
ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்த்து சட்டம் 370-ஐ மத்திய அரசு ரத்து செய்ததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பல வழக்கு தொடரப்பட்டன. பல ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணைக்கு வராமல் இருந்தது.
இதனிடையே, பல ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணைக்கு வராமல் இருந்த நிலையில் கடந்த மாதம் முதல் இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து வருகிறது.
இது நேற்று நடந்த விசாரணையில், ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி எம்.பி. முகமது அக்பர் லோனி, ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை ஏற்றுக்கொண்டு பிரமாண பத்திரம் தாக்கல் வேண்டுமென சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவிட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்த்து ரத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தவர்களில் அக்பர் லோனியும் ஒருவர். இவரது வழக்கறிஞராக கபில் சிபல் செயல்பட்டு வருகிறார்.
அதேவேளை, 2002 முதல் 2018 வரை எம்.எல்.ஏ.வாக இருந்த அக்பர் லோனி காஷ்மீர் சட்டசபையில் 'பாகிஸ்தான் வாழ்க' போன்ற கோஷங்களை எழுப்பியுள்ளார். அவரது கருத்துக்கு மன்னிப்புக்கேட்டால் மட்டுமே அவர் தொடர்ந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டுமென காஷ்மீரி பண்டிட்ஸ், ரூட்ஸ் இன் காஷ்மீர் போன்ற அமைப்பை சேர்ந்த வழக்கறிஞர் முறையிட்டார்.
அவரை தொடர்ந்து வாதிட்ட மத்திய அரசு வழக்கறிஞர் துஷார் மேதா, இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு விசுவாசமாக இருப்பதாகவும், பிரிவினைவாத சக்திகள் மற்றும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதாகவும் அக்பர் லோனி சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என முறையிட்டார்.
இதனை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட், அரசியலமைப்பின் 32 வது பிரிவின் கீழ் அவர் கோர்ட்டின் அதிகார வரம்பை அழைக்கும் போது, அவர் அரசியலமைப்பிற்கு கண்டிப்பாக கட்டுப்படுகிறார் என்று நாங்கள் எடுத்துக்கொள்கிறோம். ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதையும், தான் இந்திய அரசியலமைப்பிற்கு கட்டுப்பட்டு விசுவாசமாக இருப்பவர் என்பதையும் எந்தவித
நிபந்தனையின்றி ஏற்றுக்கொள்கிறேன் அக்பர் லோனி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து வாதிட்ட அப்கரின் வழக்கறிஞர் கபில் சிபல், அக்பர் மக்களவை எம்.பி. அவர் இந்தியர், அரசியலமைப்பு படி அவர் பதவியேற்றுள்ளார். அவர் இந்தியாவின் இறையாண்மையை ஏற்றுக்கொள்கிறார்.' என்றார்.
மேலும், லோனி தனது பிரமாண பத்திரத்தை இன்று (செவ்வாய்கிழமை) தாக்கல் செய்வார். அவர் தனது பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்யவில்லை என்றால் அவருக்காக தான் வாதாடப்போவதில்லை என லோனியின் வழக்கறிஞர் கபில் சிபல் தெரிவித்தார்.