ஆந்திராவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அல்லு அர்ஜுன்?
ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது.
அமராவதி,
ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலுடன் 175 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக வருகிற 13ம் தேதி நடைபெற உள்ளது.
இந்த தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து ஆந்திராவில் கட்சி தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மாநிலத்தின் நந்தியாலா சட்டமன்ற தொகுதியில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் ரவீந்திர கிஷோர் ரெட்டியின் வீட்டிற்கு முன்னனி நடிகரான அல்லு அர்ஜுன் தனது மனைவியுடன் வருகை தந்தார்.
இதற்கிடையே, அல்லு அர்ஜுனை காண்பதற்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள், ரவீந்திர கிஷோர் ரெட்டியின் வீட்டின் முன் திரண்டனர். இதனால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது. அப்போது அவருக்கு ஆளுயர மாலை அணிவிக்க முன்வந்தபோது, அதனை தொட்டு வணங்கிய அல்லு அர்ஜுன், தனக்கு மாலை வேண்டாம் என நிராகரித்தார்.
குறிப்பாக அல்லு அர்ஜுனின் மாமாவும், ஜனசேனா தலைவருமான பவன் கல்யாண், பித்தாபுரம் சட்டமன்றத் தொகுதியில் தேர்தலில் போட்டியிடும் நிலையில், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளரின் வீட்டிற்கு அவர் வந்ததும், பின்னர் அப்பகுதியில் கூடியிருந்த மக்களை இருவரும் சேர்ந்து சந்தித்ததும் ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.