நடிகர் அமிதாப் பச்சன் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவு குரல் கொடுக்க வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்


நடிகர் அமிதாப் பச்சன் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவு குரல் கொடுக்க வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்
x

டெல்லியில் நீதி கேட்டு போராடும் மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்திற்கு நடிகர் அமிதாப் பச்சன் ஆதரவு குரல் கொடுக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.

புதுடெல்லி,

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷண் சிங்கிற்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு மற்றும் கூட்டமைப்பின் நிதி தவறாக பயன்படுத்தப்படுவது மற்றும் தவறான நிர்வாகம் உள்ளிட்ட விசயங்களை வலியுறுத்தி 3 மாதங்களுக்கு பின் டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீண்டும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

டெல்லியில் கடந்த ஜனவரி 18-ந்தேதி இதே கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட, ஒலிம்பிக் உள்பட பல்வேறு பிரிவுகளில் சாதனைகளை படைத்த மல்யுத்த வீரர், வீராங்கனைகளான பஜ்ரங் பூனியா மற்றும் வீராங்கனைகள் சாக்ஷி மாலிக், வினேஷ் போகத் உள்ளிட்டோர் கடந்த 23-ந்தேதி மீண்டும் போராட்ட களத்திற்கு திரும்பி உள்ளனர். இந்த போராட்டம் நேற்றுடன் ஒரு வாரம் ஆகியுள்ளது.

இந்த சூழலில், சுப்ரீம் கோர்ட்டு நெருக்கடியால் டெல்லி போலீசார் உணவு மற்றும் குடிநீர் தர விடாமல் சித்ரவதை செய்கிறார்கள். போராட்டக்காரர்கள் சாலையில் படுத்து உறங்குங்கள் என அவர்கள் கூறினர் என மல்யுத்த வீரர் பூனியா குற்றச்சாட்டு தெரிவித்தது பரபரப்பு ஏற்படுத்தியது.

இந்நிலையில், டெல்லி போலீசார் கூறும்போது, மல்யுத்த வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு நாங்கள் பாதுகாப்பு வழங்குவோம். ஒரு சிறுமி உள்பட மொத்தம் 7 வீரர்கள், பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிராக புகார் அளித்து உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்களை போலீசார் விரைவில் பதிவு செய்வார்கள்.

பிரிஜ் பூஷண் சரண் சிங், இந்தியாவில் மட்டுமின்றி சர்வதேச போட்டிகளிலும் கூட மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் சுரண்டலில் ஈடுபட்டு உள்ளார் என குற்றச்சாட்டு கூறப்பட்டு உள்ளது என டெல்லி போலீசார் தெரிவித்து உள்ளனர்.

இதுபற்றி மல்யுத்த வீரர் மற்றும் வீராங்கனைகளின் வழக்கறிஞர் நரேந்திர ஹூடா கூறும்போது, ஐ.பி.சி.யின் பிரிவு 354, 354 (ஏ), 354 (டி) மற்றும் 34 ஆகிய பிரிவுகளின் கீழ் டெல்லி போலீசார் ஒரு எப்.ஐ.ஆர். பதிவு செய்து உள்ளனர். மற்றொரு எப்.ஐ.ஆர்.ரின் நகல் எங்களுக்கு வழங்கப்படவில்லை (அது பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினரிடம் மட்டுமே வழங்கப்படும்) என்று கூறியுள்ளார்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அரசியல் கட்சியினரும் சந்தித்து வருகின்றனர். இதன்படி, நேற்று காலை காங்கிரஸ் கட்சியின் உத்தர பிரதேச கிழக்கு பொது செயலாளரான பிரியங்கா காந்தி சந்தித்து பேசினார். இதேபோன்று, டெல்லியில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, நேற்று மாலை முதல்-மந்திரி கெஜ்ரிவால் அதில் பங்கேற்றார்.

அவர் போராட்ட பகுதியில் பேசும்போது, நமது நாட்டின் மீது அன்பு செலுத்துபவர்கள், அவர்கள் காங்கிரஸ் கட்சி, ஆம் ஆத்மி அல்லது பா.ஜ.க.வில் இருந்து வந்தவர்களாக இருந்தபோதும் மற்றும் எந்தவொரு கட்சியுடன் தொடர்பில் இல்லாதவர்களானாலும் கூட, அனைவரும் மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு ஆதரவளிக்க வரவேண்டும்.

இந்த வீரர்களுக்கு அனைத்து ஆதரவையும் நாங்கள் வழங்குவோம். ஆனால், அவர்களுக்கான குடிநீர், மின்சாரம் மற்றும் பிற அடிப்படை தேவைகளை துண்டிக்க கூடாது என மத்திய அரசிடம் நான் வேண்டுகோளாக கேட்டு கொள்கிறேன் என்று பேசினார்.

இந்நிலையில், டெல்லியில் நீதி கேட்டு போராடும் மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்திற்கு நடிகர் அமிதாப் பச்சன் ஆதரவு குரல் கொடுக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.

இதுபற்றி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சல்மான் அனீஸ் சோஜ் வெளியிட்டு உள்ள டுவிட்டர் பதிவில், அன்புக்குரிய அமிதாப் பச்சன் அவர்களே, நீதி கேட்டு போராடும் இந்திய மல்யுத்த வீராங்கனைகளை பற்றி நீங்கள் நிச்சயம் அறிந்திருப்பீர்கள்.

இந்தியாவின் அதிக செல்வாக்கு கொண்ட குரல்களின் ஆதரவை பெற அவர்கள் தகுதி வாய்ந்தவர்கள். உங்களுடைய மற்றும் பிற சூப்பர் ஸ்டார்களின் ஆதரவை பெற அவர்கள் தகுதியானவர்கள். தயவு செய்து உங்களது குரலை உயர்த்துங்கள் என்று தெரிவித்து உள்ளார்.


Next Story