அதானி விவகாரத்தில் கூட்டு குழு விசாரணை தேவை; எதிர்க்கட்சிகள் அமளியால் இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்தி வைப்பு


அதானி விவகாரத்தில் கூட்டு குழு விசாரணை தேவை; எதிர்க்கட்சிகள் அமளியால் இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்தி வைப்பு
x

அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை தேவை என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.



புதுடெல்லி,


கவுதம் அதானியின் நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் சந்தை ஆய்வு நிறுவனம் பல்வேறு மோசடி குற்றச்சாட்டுகளை எழுப்பி அறிக்கை வெளியிட்டது. இதன் எதிரொலியாக பங்கு சந்தையில் பெரும் சரிவு ஏற்பட்டது.

கடந்த 1-ந்தேதி மத்திய பட்ஜெட் வெளியான அன்று பங்கு சந்தை ஏற்றம் கண்டிருந்தது. எனினும், அதற்கு அடுத்த நாள் சரிவை சந்தித்தது. அதானி குழும நிறுவனங்களின் பங்கு வர்த்தகம் தொடர்ந்து நஷ்டத்திலேயே காணப்பட்டன.

அதானி குழுமத்தில் எல்.ஐ.சி. முதலீடு செய்துள்ள நிலையில் எஸ்.பி.ஐ. கடன் வழங்கி உள்ளது. இதனை அடுத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அவையில் இந்த விவகாரம் பற்றி விவாதிக்க வேண்டும் என கோரி தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.




இதன் எதிரொலியாக, மும்பையில் உள்ள எஸ்.பி.ஐ. வங்கி அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் ஜி.பி. சாலையில் உள்ள எல்.ஐ.சி. தென்மண்டல அலுவலகத்திற்கு வெளியேயும், போராட்டம் நடத்தப்பட்டது.

இந்த விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி மற்றும் பிற எதிர்க்கட்சிகள் தரப்பில் இருந்து குரல் எழுப்பப்பட்டு வருகின்றன. காங்கிரஸ் எம்.பி. வேணுகோபால், அக்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் அவையில் விவாதம் நடத்த கோரிக்கை விடுத்து உள்ளனர்.

நாடாளுமன்றத்திற்கு வெளியே ராஷ்டீரிய ஜனதா தள எம்.பி. மனோஜ் ஜா உள்ளிட்டோர் அதானி விவகாரம் அரசால் மூடி மறைக்கப்படுகிறது. இதனை நாட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என அதானி கூறுகிறார். ஆனால் எப்படி? என தெரிவிக்க வேண்டும்.

அதற்கு எங்களுக்கு நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என கூறி கோஷம் எழுப்பியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.பி.யான டாக்டர் மகுவா மஜ்ஜியும் குரல் எழுப்பியுள்ளார்.

இதனை தொடர்ந்து நாடாளுமன்றத்தின் இரு அவையிலும் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இதனால், இரு அவைகளிலும் ஒரே கூச்சலும், குழப்பமும் காணப்பட்டன. இதனை தொடர்ந்து இரு அவைகளின் நடவடிக்கைகள் மதியம் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன.


Next Story