நமது நற்பெயரை கெடுக்கும் முயற்சி ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்து அதானி விளக்கம்


நமது நற்பெயரை கெடுக்கும் முயற்சி ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்து அதானி விளக்கம்
x

அதானி நிறுவனத்தின் நற்பெயரை கெடுக்கும் முயற்சி என ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்து அதானி விளக்கமளித்துள்ளார்.

மும்பை,

பங்குச்சந்தையில் அதானி குழுமம் முறைகேடு செய்ததாகவும், நிதி கையாடல் செய்ததாகவும் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பு அறிக்கை வெளியிட்டது.

இந்த குற்றச்சாட்டை அதானி குழுமம் மறுத்தபோதிலும், பங்குச்சந்தையில் அதன் மதிப்பு கடுமையாகச் சரிந்தது. இதனால், அதானி குழுமத்தில் முதலீடு செய்தவர்கள் பாதிக்கப்பட்டனர்.

இதற்கிடையே, அதானி குழும முறைகேடு குறித்து விசாரிக்க உத்தரவிடக்கோரி, வக்கீல் எம்.எல்.சர்மா உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் 4 பொதுநல மனுக்களைத் தாக்கல் செய்தனர்

அவற்றைத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு கடந்த மார்ச் 2-ந் தேதி விசாரணையின்போது, அதானி குழும முறைகேடுகள் குறித்து 2 மாதங்களுக்குள் விசாரணை நடத்துமாறு பங்குச்சந்தையை ஒழுங்குபடுத்தும் அமைப்பான 'செபி'க்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

மேலும், ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.எம்.சாப்ரே தலைமையில் 6 பேர் கொண்ட குழுவையும் அமைத்தது. கடந்த மே 12-ந் தேதி விசாரணையின்போது, கூடுதலாக 6 மாதங்கள் கால அவகாசம் கோரி, 'செபி' மனுத் தாக்கல் செய்தது. அதற்கு மனுதாரர்களின் வக்கீல் பிரசாந்த் பூஷண், கடந்த 2016-ம் ஆண்டிலிருந்து அதானி குழும முறைகேடு குறித்து 'செபி' விசாரணை நடத்தி வருவதால், கால நீட்டிப்பு அளிக்கத் தேவையில்லை என்று வாதிட்டார்.

இந்நிலையில், மே 16ஆம் தேதி இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'செபி' சார்பில் புதிதாக ஒரு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், 51 இந்திய நிறுவனங்கள் வெளியிட்ட உலகளாவிய வைப்புநிதி ரசீதுகள் தொடர்பாக நாங்கள் விசாரித்து வருவதாக ஏற்கனவே கூறியிருந்தோம். ஆனால் அந்த விசாரணையில், அதானி குழும நிறுவனம் எதுவும் இல்லை.

எனவே, கடந்த 2016-ம் ஆண்டிலிருந்து அதானி குழுமம் குறித்து நாங்கள் விசாரித்து வரவில்லை. அப்படிச் சொல்வது அடிப்படை ஆதாரமற்ற தகவல். ஹிண்டன்பர்க் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட 12 பரிவர்த்தனைகள் குறித்து விசாரித்து வருகிறோம். முதல் நோக்கிலேயே, அவை மிகவும் சிக்கலானதாகத் தெரிகிறது. பல்வேறு வங்கிகள், சர்வதேச வங்கிகள் ஆகியவற்றிடம் இருந்து அறிக்கைகள் பெற்று ஆராய வேண்டி உள்ளது. எனவே, இதற்கு நேரம் எடுக்கும். முழு உண்மைகளையும் அறியாமல், தவறான முடிவுக்கு வருவது முதலீட்டாளர்கள் நீதியைப் பெற உதவாது.

ஆகவே, கூடுதல் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் இவ்வழக்கு, மே 17ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அதானி குழுமம் தொடர்பாக அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை பற்றி விசாரணை நடத்த (இந்தியப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம்) செபிக்கு சுப்ரீம் கோர்ட்டு 3 மாதங்கள் அவகாசம் அளித்தது. இதன்படி ஹிண்டன்பர்க் அறிக்கையை ஆய்வு செய்து ஆகஸ்ட் 14ஆம் தேதிக்கு முன் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இன்று அதானி நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் கவுதம் அதானி ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்து விளக்கமளித்துள்ளார்.

ஹிண்டன்பர்க் அறிக்கையில் கூறப்பட்டவை அனைத்தும் தவறானவை மேலும் அனைத்தும் போலியான குற்றச்சாட்டுகள். அதானி நிறுவனத்தின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கவே அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில் கூறப்பட்டுள்ள அனைத்தும் சட்டப்படி தீர்வுகாணப்பட்டுள்ளது என அதானி விளக்கம் அளித்துள்ளார்.


Next Story