தாராவி மேம்பாட்டு திட்டம் அதானி குழுமத்திடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைப்பு


தாராவி மேம்பாட்டு திட்டம் அதானி குழுமத்திடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைப்பு
x

ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவி மேம்பாட்டு திட்டம் அதானி குழுமத்திடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் மக்கள் அடுக்குமாடிகளில் வசிக்க போகிறார்கள். இருப்பினும் அவர்களுக்கு உள்ள கவலைகளையும் வெளிப்படுத்தி உள்ளனர்.

தாராவி மேம்பாட்டு திட்டம்

ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான மும்பை தாராவியில் தமிழர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். 2½ சதுர கி.மீ. பரபரப்பில் அமைந்து உள்ள தாராவியில் சுமார் 6½ லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள மக்கள் சிறிய அளவிலான சால் (குடிசை) வீடுகளில் வசித்து வருகின்றனர். நிதி தலைநகரின் மையப்பகுதியில் உள்ள தாராவியை குடிசையில்லாத பகுதியாக மேம்படுத்துவது மராட்டிய அரசின் கனவு திட்டமாக உள்ளது. சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக தாராவி மேம்பாட்டு திட்டம் நிறைவேற்றப்படாமல் உள்ளது. குடிசை மேம்பாட்டு திட்டம் (டி.ஆர்.பி.), செக்டார் திட்டம் என பல பெயர்களில் தாராவியை மேம்படுத்த முயன்றும் அரசு தோல்வியை தான் சந்தித்தது.

அதானி குழுமத்துக்கு டெண்டர்

இந்தநிலையில் கடந்த பா.ஜனதா-சிவசேனா ஆட்சியில் தாராவி மேம்பாட்டு திட்டம் துபாயை சேர்ந்த கட்டுமான நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. எனினும் கடைசி நேரத்தில் துபாய் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட டெண்டர் ரத்து செய்யப்பட்டது. இந்தநிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தாராவி மேம்பாட்டு திட்டத்துக்கான டெண்டர் விடப்பட்டது. இதில் தென்கொரியா, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் உள்பட உலகின் 8 முன்னணி நிறுவனங்கள் பங்கு பெற்றன. இதில் அதானி குழுமம் அதிகபட்சமாக ரூ.5 ஆயிரத்து 69 கோடிக்கு டெண்டர் கோரியதால் அந்த நிறுவனத்துக்கு தாராவி மேம்பாட்டு திட்டம் ஒப்படைக்கப்பட்டது. 640 ஏக்கர் நிலப்பரப்பில் திட்டம் நிறைவேற்றப்படுகிறது. தாராவி மக்களுக்கு அடுக்குமாடி வீடு கட்டி கொடுப்பது அதானி குழுமத்தின் பணியாகும்.

பங்குகள் சரிந்ததால் அச்சம்

கடந்த சில மாதங்களுக்கு முன் அதானி குழுமம் பங்கு சந்தை மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைதொடர்ந்து அந்த நிறுவனத்தின் பங்குகள் சரிந்தன. காங்கிரஸ் கட்சி அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்ட தாராவி மேம்பாட்டு திட்ட டெண்டரை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியது. இதனால் தாராவி மேம்பாட்டு திட்டம் பாதிக்கப்படுமா என்ற அச்சம் எழுந்தது.

அதிகாரப்பூர்வமாக ஒப்படைப்பு

இந்தநிலையில் தாராவி மேம்படுத்தும் திட்டப் பணியை மராட்டிய அரசு அதிகாரப்பூர்வமாக அதானி குழுமத்துக்கு வழங்கி உள்ளது. இதுதொடர்பாக மாநில அரசின் வீட்டு வசதி துறை அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. திட்டப்பணிகளை அதானி குழுமம் 7 ஆண்டுகளுக்குள் முடிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

வணிக மையமான பி.கே.சி. அருகே உள்ள தாராவி மேம்பாட்டு பணிகள் மூலம் ரூ.20 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும் என கூறப்படுகிறது.

வாடகையை நம்பி வாழும் மக்கள்

அதானி குழுமத்துக்கு அதிகாரப்பூர்வமாக திட்டம் வழங்கப்பட்டது குறித்து தாராவி நக்ரிக் சேவா சங்க தலைவர் பவுல் ரபேல் கூறியதாவது:-

தாராவி சீரமைப்பு திட்டத்தை அதானி குழுமத்துக்கு வழங்க அரசு பச்சை கொடி காட்டியிருப்பது எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது. இங்கு ஆயிரக்கணக்கான ஒரு மாடி குடிசை வீடுகள் உள்ளன. இதில் ஒரு வீட்டில் உரிமையாளரும், மற்றொரு வீட்டில் வாடகைக்கும் மக்கள் குடியிருக்கின்றனர். வீட்டு உரிமையாளர்கள், வாடகையை நம்பி தான் வாழ்கின்றனர். மேம்பாட்டு திட்டத்தில் இந்த வீடுகள் இடிக்கப்பட்டால் உரிமையாளருக்கு அடுக்குமாடி கட்டிடத்தில் ஒரு வீடு தான் வழங்கப்படும். அவர்கள் என்ன செய்வார்கள்?.

இவ்வாறு அவர் கூறினார்.

வக்கீல் சந்தீப் கடககே கூறியதாவது:-

அதானிக்கு தான் பயன் கிடைக்கும்

தாராவி மேம்பாட்டு திட்டம் உலகின் மிகப்பெரிய நில ஊழல். இந்த திட்டம் மூலம் அதானி குழுமத்துக்கு 10 கோடி சதுர அடிக்கு மேம்பாட்டு உரிமை கிடைக்கிறது. அதானிக்கு விற்பனை செய்ய 6 கோடி சதுர அடி நிலம் கிடைக்கும். அதன் மூலம் ரூ.3 லட்சம் கோடி வருவாய் ஈட்ட முடியும். தாராவி திட்டத்தால் பலன் அடைய போவது மக்களா? அல்லது அதானியா?.

இந்த திட்ட விதிமுறைகளின்படி 2000-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முந்தைய குடிசை வீடுகளுக்கு தான் அடுக்குமாடிகளில் வீடு கிடைக்கும். ஆனால் 2000-க்கு பிறகு கட்டப்பட்ட குடிசைகளுக்கும், வீடு கொடுக்க வேண்டும். தாராவியை சேர்ந்த 80 சதவீத மக்கள் இங்கு செயல்படும் சிறுதொழில்களை நம்பி உள்ளனர். அவை பாதிப்பை சந்திக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சிறு தொழில்கள் முடங்கும்

சமூக ஆர்வலர் தருண் தாஸ் கூறுகையில், " தாராவியில் ஆயிரக்கணக்கில் குடிசைகள் உள்ளன. ஒரு வீட்டில் 4 முதல் 5 குடும்பங்கள் வசிக்கின்றனர். மேம்பாட்டு திட்டம் நடந்தால் வழங்கப்படும் ஒரு வீடு அந்த குடும்பங்களுக்கு போதுமானதாக இருக்காது. இங்கு 2 ஆயிரத்துக்கும் அதிகமான இட்லி வியாபாரிகள் உள்ளனர். இங்கு இருந்து தான் நகர் முழுவதும் உணவு செல்கிறது. மேம்பாட்டு திட்டம் நடந்தால் இதுபோன்ற தொழில்கள் எல்லாம் இருக்காது. தோல், கவரிங் நகை போன்ற சிறு தொழில் கூடங்கள் முடங்கும் " என்றார்.


Next Story