'ஹிண்டன்பர்க் நிறுவன குற்றச்சாட்டு இந்தியா மீதான தாக்குதல்' - அதானி நிறுவனம் பதில்


ஹிண்டன்பர்க் நிறுவன குற்றச்சாட்டு இந்தியா மீதான தாக்குதல் - அதானி நிறுவனம் பதில்
x

கோப்புப்படம்

பங்குச்சந்தை மற்றும் கணக்குகளில் மோசடி நடந்ததாக ஹிண்டன்பர்க் கூறியுள்ள குற்றச்சாட்டு இந்தியா மீதான தாக்குதல் என தொழில் அதிபர் அதானியின் நிறுவனம் கூறியுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவின் பிரபல தொழில் அதிபரும், உலக பணக்காரர்களில் முன்னணியில் இருப்பவருமான அதானி, இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார்.

இவர் மீது அமெரிக்காவின் நியூயார்க்கை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் ஹிண்டன்பர்க் எனப்படும் கார்பரேட் ஆய்வு நிறுவனம் சமீபத்தில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்தது.

அதாவது அதானி நிறுவனம் பங்குச்சந்தையில் மோசடியில் ஈடுபட்டதாகவும், கணக்குகளில் முறைகேடு செய்ததாகவும் அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

413 பக்க அறிக்கை

இது இந்தியா மட்டுமின்றி உலக அளவில் பெரும் அதிர்வலைகளை கிளப்பியது. அத்துடன் இந்திய பங்குச்சந்தையில் அதானி நிறுவனத்தின் பங்குகள் மிகப்பெரும் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன.

இந்த நிலையில் ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் குற்றச்சாட்டுக்கு அதானி நிறுவனம் நேற்று பதில் அளித்து உள்ளது. 413 பக்கங்களில் வெளியிட்டுள்ள இந்த பதிலில், ஹிண்டன்பர்க் அறிக்கைக்கு பின்னால் மறைமுக நோக்கம் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டு உள்ளதாவது:-

திட்டமிட்ட தாக்குதல்

ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் அறிக்கை, எந்தவொரு குறிப்பிட்ட நிறுவனத்தின் மீதான தேவையற்ற தாக்குதல் மட்டுமல்லாது, இந்தியா மற்றும் இந்திய நிறுவனங்களின் சுதந்திரம், ஒருமைப்பாடு, தரம், இந்தியாவின் வளர்ச்சி மற்றும் லட்சியம் ஆகியவற்றின் மீது தொடுக்கப்பட்ட திட்டமிட்ட தாக்குதலாகும்.

இந்த அறிக்கை முழுவதும் முரண்பாடுகளால் நிறைந்துள்ளது. அனுமதிக்கப்பட்ட சிறிய விற்பனையாளர் மற்றும் எண்ணற்ற முதலீட்டாளர்களின் செலவில் தவறான வழிகளில் பெரிய நிதி ஆதாயத்தை பெறுவதற்காக ஹிண்டன்பர்க், பத்திரங்களில் தவறான சந்தையை உருவாக்குவதை மட்டுமே நோக்கமாக கொண்டுள்ளது.

இந்த அறிக்கை முற்றிலும் சுயநல நோக்கங்களுக்காகவும், அன்னிய செலாவணி சட்டங்களை அப்பட்டமாக மீறியதாகவும் உள்ளது. இந்த அறிக்கை சுதந்திரமானதோ அல்லது நன்றாக ஆய்வு செய்யப்பட்டதோ அல்ல.

சட்டங்களுக்கு இணங்குகிறோம்

இந்த விவகாரத்தில் அனைத்து சட்டங்கள் மற்றும் ஒழுங்கு முறைகளுக்கு நாங்கள் இணங்குகிறோம் என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம். எங்கள் பங்குதாரர்கள் அனைவரின் நலன்களையும் பாதுகாக்கும் வகையில், நிர்வாகத்தின் மிக உயர்ந்த மட்டத்தில் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

அதானி குழுமம் மிகவும் வலுவான உள் கட்டுப்பாடுகள் மற்றும் தணிக்கைக் கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ளது. இந்த குழுமத்தின் அனைத்து பட்டியலிடப்பட்ட நிறுவனங்களும் வலுவான நிர்வாக கட்டமைப்பைக் கொண்டுள்ளன.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


Next Story