ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களுக்கான கூடுதல் இடஒதுக்கீடு முடிவு புரட்சிகரமானது - பசவராஜ் பொம்மை


ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களுக்கான கூடுதல் இடஒதுக்கீடு முடிவு புரட்சிகரமானது - பசவராஜ் பொம்மை
x

கர்நாடகத்தில் எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்கான கூடுதல் இடஒதுக்கீடு முடிவு புரட்சிகரமானது என்றும், ஆனால் காங்கிரஸ் கட்சி ஆதிதிராவிடர்களுக்கு எதிராக இருப்பதாகவும் முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை தெரிவித்துள்ளார்.

கூடுதல் இடஒதுக்கீடு

கர்நாடகத்தில் ஆதிதிராவிடர் (எஸ்.சி), பழங்குடியினருக்கு (எஸ்.டி.) கர்நாடக அரசு கூடுதல் இடஒதுக்கீடு வழங்கி அறிவித்துள்ளது. அதாவது கர்நாடகத்தில் பழங்குடியினர், தங்களுக்கு வழங்கப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டை 3 சதவீதத்தில் இருந்து 7½ சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று கோரி நீண்ட காலமாக போராடி வந்தனர். இந்த நிலையில் கர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடரில், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, பழங்குடியின சமூகத்தினக்கு இட ஒதுக்கீட்டை அதிகரிப்பது குறித்து விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டம் விரைவில் கூட்டப்படும் என்று அறிவித்தார்.

அதன்படி கர்நாடக அனைத்துக்கட்சி கூட்டம் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் பெங்களுருவில் உள்ள கிருஷ்ணா இல்லத்தில் கடந்த 7-ந்தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பழங்குடியின சமூகத்திற்கு இட ஒதுக்கீட்டை அதிகரிப்பது குறித்து 2 மணி நேரத்திற்கும் மேலாக விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில், ஆதிதிராவிடர்களுக்கு இட ஒதுக்கீட்டை 15 சதவீதத்தில் இருந்து 17 சதவீதமாகவும், பழங்குடியின சமூகத்தினருக்கு 3 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாகவும் என மொத்தம் அந்த சமூகங்களுக்கு இட ஒதுக்கீட்டை 18-ல் இருந்து 24 சதவீதமாக உயர்த்துவது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும் இந்த கூடுதல் இடஒதுக்கீடுக்கு கர்நாடக மந்திரி சபையும் ஒப்புதல் வழங்கியது.

முதல்-மந்திரி பெருமிதம்

இந்த நிலையில், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்கான இடஒதுக்கீடு என்பது அரசின் புரட்சிகரமான முடிவு என பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். அதாவது அவர் நேற்று விஜயநகர் மாவட்டம் ஒசப்பேட்டேயில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

முடிவு புரட்சிகரமானது

வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. சமுதாயத்தில் கடைக்கோடியில் உள்ளவரும் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் தீனதயாள் உபாத்யாயா அந்தியோத்தயா திட்டத்தை அமல்படுத்தினார். அந்தியோத்தயாவின் அடிப்படை தத்துவமே பா.ஜனதா உடையது. இது சித்தராமையாவுக்கு தொியாது.

ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீட்டை அதிகரிக்க எடுத்த முடிவு புரட்சிகரமானது. இந்த விஷயத்தில் நாங்கள் அனைத்து நடைமுறைகளையும் செய்து முடிப்போம். இதுகுறித்து எங்களுக்கு தெரியும். இந்த முடிவை காங்கிரஸ் கட்சியால் 50 ஆண்டுகளாக எடுக்க முடியவில்லை. சட்ட நிபுணர்களுடன் நாங்கள் கலந்து ஆலோசனை நடத்தியுள்ளோம். இந்த இட ஒதுக்கீட்டு அதிகரிப்பு முடிவை நாங்கள் வெற்றிகரமாக செயல்படுத்துவோம்.

புள்ளி விவரங்கள்

நாங்கள் அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு முடிவுகளை எடுப்போம். அதை விடுத்து எதுவும் செய்ய முடியாது. பல பேர் பல விதமாக கருத்துகளை கூறுகிறார்கள். ஆனால் இட ஒதுக்கீடு விஷயத்தில் புள்ளி விவரங்கள் அடிப்படையில் தான் முடிவு எடுக்க வேண்டும். நீதிபதி நாகமோகன்தாஸ் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அம்சங்களின் அடிப்படையில் நாங்கள் முடிவு எடுத்துள்ளோம்.

நாங்கள் ஜனசங்கல்ப சுற்றுப்பயணத்தை நடத்த ஒரு மாதத்திற்கு முன்பே முடிவு செய்திருந்தோம். அதனால் ராகுல் காந்தியின் பாதயாத்திரைக்கும், எங்களின் சுற்றுப்பயணத்திற்கும் தொடர்பு இல்லை. காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி ஆட்சியில் நாகமோகன்தாஸ் குழுவை அமைத்தனர். ஆனால் அந்த குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தும் சக்தி பா.ஜனதாவுக்கு உள்ளது. அதை நாங்கள் செய்துள்ளோம்.

நல்ல வரவேற்பு

ஆதிதிராவிட மற்றும் பழங்குடி மக்களுக்கு இட ஒதுக்கீட்டை அதிகரிப்பது சில விளக்கங்களை காங்கிரஸ் கேட்டுள்ளது. இதன் மூலம் அக்கட்சி அந்த மக்களுக்கு எதிராக உள்ளது தெளிவாக தெரிகிறது. எங்களின் 'ஜனசங்கல்ப' சுற்றுப்பணத்தை ராய்ச்சூரில் தொடங்கினோம். இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வரும் நாட்களில் அனைத்து தொகுதிகளுக்கும் செல்ல திட்டமிட்டுள்ளோம். மத்திய-மாநில அரசுகள் மற்றும் எடியூரப்பா ஆட்சி காலத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து மக்களுக்கு தெரிவிப்போம். இந்த 'ஜனசங்கல்ப' சுற்றுப்பயணம் 'விஜயசங்கல்ப' அதாவது வெற்றி பயணமாக மாறும்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.


Next Story