ஆதிக், அஷ்ரப் படுகொலை; நிபுணர் குழு அமைக்க கோரிய மனு;சுப்ரீம் கோர்ட்டில் வரும் 24-ந்தேதி விசாரணை


ஆதிக், அஷ்ரப் படுகொலை; நிபுணர் குழு அமைக்க கோரிய மனு;சுப்ரீம் கோர்ட்டில் வரும் 24-ந்தேதி விசாரணை
x
தினத்தந்தி 18 April 2023 1:59 PM IST (Updated: 18 April 2023 2:28 PM IST)
t-max-icont-min-icon

ஆதிக் மற்றும் அஷ்ரப் படுகொலை பற்றி விசாரிக்க நிபுணர் குழு அமைக்க உத்தரவிட கோரிய மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் வரும் 24-ந்தேதி விசாரணை நடைபெற உள்ளது.



புதுடெல்லி,


உத்தர பிரதேசத்தில் முன்னாள் எம்.பி. மற்றும் பிரபல ரவுடியான ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமது இருவரையும் போலீசார் அழைத்து சென்றபோது மர்ம கும்பல் அவர்களை நேற்றிரவு சுட்டு வீழ்த்தியது.

அவர்கள் செய்தியாளர்களுடன் பேசிக்கொண்டு செல்லும்போதே ஒரு கும்பல் இருவரையும் சுடும் காட்சிகள் வீடியோவாகவும் வெளிவந்து பரபரப்பு ஏற்படுத்தின.

கடந்த மாதம் ஆதிக் அகமது உள்ளிட்ட 3 பேருக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ஆயுள் தண்டனையும் விதித்து பிரயாக்ராஜ் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அவர்கள் இருவரும் சுடப்பட்ட சம்பவம் எதிரொலியாக, உத்தர பிரதேசத்தின் அனைத்து மாவட்டங்களிலும் குற்றவியல் நடைமுறை சட்டத்தின்படி, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் போலீசார் ரோந்து பணியிலும் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் பற்றி போலீசார் கூறும்போது, ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமது மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து வரப்பட்டனர். அப்போது அவர்கள் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.

ஊடகக்காரர்கள் போன்று வந்த 3 பேர் திடீரென அவர்களை சம்பவ இடத்திலேயே சுட்டு கொன்றனர். இந்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த தாக்குதலில், கான்ஸ்டபிள் ஒருவருக்கும் துப்பாக்கி குண்டு பாய்ந்து உள்ளது என பிரயாக்ராஜ் மாவட்ட காவல் ஆணையாளர் ரமீத் சர்மா கூறினார்.

பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு உள்ளது என ஆதிக் அகமது கூறி வந்த நிலையில், இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நடந்து உள்ளது.

இதுபற்றிய போலீசாரின் எப்.ஐ.ஆர். பதிவில், ரவுடியாக இருந்து அரசியல்வாதியான ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதரரை, நாங்கள் பிரபலமடைவதற்காக கொலை செய்தோம் என துப்பாக்கி சூடு நடத்திய 3 பேரும் கூறியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆதிக் மற்றும் அஷ்ரப் இருவரும் போலீஸ் காவலில் வைக்கப்பட்டதும், நாங்கள் நிருபர்கள் போன்று எங்களை காட்டி கொண்டோம். பத்திரிகையாளர்களுடன் சேர்ந்து ஒன்றாகவே சுற்றி வந்தோம். இரண்டு பேரையும் சுட்டு கொல்வது என முடிவு செய்தோம் என்று அந்த 3 பேரும் போலீசாரின் விசாரணையில் தெரிவித்து உள்ளனர் என எப்.ஐ.ஆர். பதிவு தெரிவிக்கின்றது. இதனால், இந்த வழக்கில் பல விசயங்கள் விசாரணைக்கு பின் வெளிவரும் என கூறப்படுகிறது.

ஆதிக் அகமதுவை நிருபர்கள் போல் வந்து சுட்டு கொன்ற நிலையில், பத்திரிகையாளர்கள் பாதுகாப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்து உள்ளது.

பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா, ஐ.எஸ்.ஐ. மற்றும் தாவூத் இப்ராகிமுடன் ஆதிக் அகமதுவுக்கு தொடர்பு இருந்து உள்ளது என எப்.ஐ.ஆர். பதிவு தெரிவிக்கின்றது.

ஆதிக் அளித்த வாக்குமூலம் ஒன்றில், பாகிஸ்தானை அடிப்படையாக கொண்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கம் மற்றும் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பு ஆகியவற்றுடன் அவருக்கு தொடர்பு உள்ளது என தெரிவித்து உள்ளார். பாகிஸ்தான் ஆளில்லா விமானம் வழியே பஞ்சாப்பில் ஆயுதங்கள் போடப்பட்டன என தெரிவித்து உள்ளார்.

ஆயுதங்களை தங்களுக்கு வழங்கியவர்களின் முகவரி தங்களுக்கு தெரியம் என ஆதிக் மற்றும் அஷ்ரப் போலீசில் கூறியுள்ளனர். ஆனால், சிறையில் இருந்து கொண்டு தங்களால் அவர்களது இடம் பற்றி தெரிவிக்க முடியாது. அந்த இடத்திற்கு அழைத்து சென்றால், அது பற்றி கூற முடியும் என அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

உமேஷ் பால் கொலையில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் அந்த முகவரியில் உள்ள நபரிடம் இருந்தே பெறப்பட்டன என கூறியுள்ளனர். ஐ.எஸ். அமைப்பின் 227 எண் கொண்ட கும்பல் தலைவராக ஆதிக் செயல்பட்டு வந்து உள்ளார். அவரது சகோதரர் அஷ்ரப்பும் அதில் உறுப்பினராக இருந்து உள்ளார்.

வெளிநாட்டு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதும் பாதுகாப்பு முகமைகள் உஷார்படுத்தப்பட்டு உள்ளன. இதனால், ஆதிக்கின் பயங்கவராத செயல்கள் பற்றி தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அமைப்பும் விசாரணை நடத்த கூடிய சூழல் இருந்தது.

முக்தார் அன்சாரி என்பவரின் உதவியுடன் நிழலுலக தாதா தாவூத் இப்ராகிமுடனும் ஆதிக் தொடர்பு ஏற்படுத்தி கொண்டு உள்ளார் என தகவல் தெரிவிக்கின்றது. இதன்பின் பாகிஸ்தான் வழியேயான ஆயுத கடத்தலில் ஆதிக் கும்பல் ஈடுபட தொடங்கி உள்ளது.

ஏ.கே. 47 ரக துப்பாக்கி, 0.45 பிஸ்டல் துப்பாக்கி, ஆர்.டி.எக்ஸ். உள்ளிட்டவற்றை ஐ.எஸ்.ஐ.யிடம் இருந்து ஆதிக் பெற்றுள்ளார். இவற்றில் 0.45 பிஸ்டல் துப்பாக்கி, உமேஷ் பால் கொலையில் பயன்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், வழக்கறிஞர் விஷால் திவாரி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்து உள்ளார். இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் அவர் தாக்கல் செய்த அந்த மனுவில், முன்னாள் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஒருவர் தலைமையில் தனிப்பட்ட நிபுணர் குழு ஒன்றை நியமித்து, ஆதிக் மற்றும் அஷ்ரப் படுகொலை பற்றி விசாரணை நடத்த வேண்டும் என கோரி உள்ளார்.

இதனை அவசர வழக்காக எடுத்து கொள்ள வேண்டும் என்றும் கோரி உள்ளார். இதனை ஏற்று இந்த மனு மீது வருகிற 24-ந்தேதி விசாரணை நடைபெறும் என கோர்ட்டு அறிவித்து உள்ளது.

1 More update

Next Story