எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: ஏப்ரல் 5-ம் தேதி வரை நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்தி வைப்பு


எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: ஏப்ரல் 5-ம் தேதி வரை நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்தி வைப்பு
x

பாஜக, எதிர்க்கட்சி எம்.பி.க்களின் தொடர் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 14-வது நாளாக முடங்கியது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த மார்ச் 13ம் தேதி தொடங்கியது. நடாளுமன்ற இரண்டாவது அமர்வு தொடங்கிய நாள் முதல் இதுவரை எந்த ஆக்கப்பூர்வ நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமல் முடங்கியுள்ளது. கடந்த வாரங்களில் அதானி விவகாரம் குறித்து காங்கிரஸ் கேள்வியெழுப்பி அமளியில் ஈடுபட்டு வந்தனர். அவர்களுக்கு ஈடுகொடுக்கும் விதமாக ராகுல் காந்தி பிரான்ஸ் ஊடகத்திற்கு அளித்த பேட்டி குறிப்பிட்டு, அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி பாஜக எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.

இதனால் அவை தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வந்தது. அதன்பின்னர் ராகுல்காந்தி எம்.பி., பதவி பறிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த வெள்ளிக்கிழமையன்று மக்களவையில் மூன்று மசோதாக்களையும், மாநிலங்களவையில் இரண்டு மசோதாக்களையும் அறிமுகப்படுத்தி அதன் மீது விவாதம் நடத்த அரசு தரப்பில் திட்டமிடப்பட்டிருந்தது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கத்தால் , இரு அவைகளும் இன்றைக்கு ( ஏப்ரல் 3 ) ஒத்திவைக்கப்பட்டது.

சனி, ஞாயிறு விடுமுறைக்குப் பின்னர் இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்ற இரு அவைகளும் கூடின. நாடாளுமன்றம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ராகுல் தகுதி நீக்கம் குறித்து விவாதிக்கக்கோரி முழக்கம் எழுப்பினர். இதனால் மக்களவை, மாநிலங்களவை இரண்டும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்ட பின் மக்களவையும் மாநிலங்களவையும் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்தநிலையில், இரு அவைகளும் 2 மணிக்கு கூடியது தொடர்ந்து ராகுல்காந்தி விவகாரத்தில் இன்றும் அமளி நீடித்ததால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஏப்.5 காலை வரை ஒத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் ஓம்.பிர்லா அறிவித்தார்.

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி, நாளை மகாவீரர் ஜெயந்தி விடுமுறை காரணமாக நாடாளுமன்றம் 5-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. பாஜக, எதிர்க்கட்சி எம்.பி.க்களின் தொடர் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 14-வது நாளாக முடங்கியது.

தகுதி நீக்க நடவடிக்கையை கண்டித்து சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு காங்கிரஸ் எம்.பிக்கள் முழக்கம் எழுப்பியதால் ஏப்ரல் 5-ம் தேதி வரை நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டது.


Next Story