அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை


அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
x

அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரம் தொடர்பான மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது.

புதுடெல்லி,

கடந்த ஜூலை 11-ந்தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்குகளை சென்னை ஐகோர்ட்டு இரு நீதிபதிகள் அமர்வு கடந்த ஆகஸ்டு 25-ந்தேதி விசாரித்தது.

இந்த வழக்கில் கடந்த செப்டம்பர் 2-ந்தேதி அளித்த தீர்ப்பில், பொதுக்குழு செல்லாது என்றும், ஜூன் 23-ந்தேதிக்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும் என்றும் தனி நீதிபதி பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், பி.வைரமுத்து சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், சென்னை ஐகோர்ட்டின் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதிசெய்ய வேண்டும். இரு நீதிபதிகள் கடந்த செப்டம்பர் 2-ந்தேதி பிறப்பித்த உத்தரவில் அனைத்து அம்சங்களும் ஆராயப்படவில்லை. எனவே இரு நீதிபதிகளின் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. அந்த மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு இன்று (புதன்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் விசாரிக்கிறது.


Next Story