கேரளாவில் ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் எதிரொலி: தட்சிண கன்னடா மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை


கேரளாவில் ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் எதிரொலி: தட்சிண கன்னடா மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
x
தினத்தந்தி 25 Aug 2023 6:45 PM GMT (Updated: 25 Aug 2023 6:46 PM GMT)

கேரளாவில் ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் எதிரொலியால் தட்சிண கன்னடா மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

மங்களூரு-

கேரளாவில் ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் எதிரொலியால் தட்சிண கன்னடா மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல்

கேரள மாநிலத்தில் தற்போது ஆப்பிரிக்கன் பன்றிக் காய்ச்சல் பரவி வருகிறது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான பன்றிகள் இறந்துள்ளன. இதனால் கேரளாவில் பன்றி இறைச்சி விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கேரளாவுக்கு பன்றிகள் கொண்டு வரவும் வெளியே கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் கேரள மாநிலம் அருகே தட்சிண கன்னடா மாவட்டம் அமைந்துள்ளது.

இந்தநிலையில் தட்சிண கன்னடா மாவட்டத்தில் சுகாதாரத்துறை சார்பில் ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல்பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி கூறுகையில், கேரளாவில் ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் கேரளாவையொட்டி உள்ள தட்சிண கன்னடா மாவட்டத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பண்ணைகளில் ஆய்வு

அதன்படி மாவட்டத்தில் உள்ள பன்றி பண்ணைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மேலும் பண்ணை உரிமையாளர்களிடம் ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் குறித்து கூற வேண்டும். குறிப்பாக காட்டு பன்றிகளிடம் இருந்து நோய் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது.

தற்போது ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சலுக்கு மருந்து இல்லை. இந்த காய்ச்சல் ஒரு பன்றிக்கு தாக்கப்பட்டால் அதன் தாக்கம் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை உள்ள பன்றிகளையும் தாக்கும். இதனால் பன்றிகளை அழிக்கும் பட்சத்தில் பன்றி வளர்ப்பவர்கள் பாதிக்கப்படுவார்கள்.

எனவே தட்சிண கன்னடா மாவட்டத்தில் இருந்து கேரள மாநிலத்திற்கு பன்றிகள் கொண்டு செல்லும் வாகனங்களை பரிசோதனை செய்த பின்னரே அனுப்பி வைக்க வேண்டும். அதேப்போல் கேரளாவில் இருந்து தட்சிண கன்னடா மாவட்டத்திற்கு வாகனங்களில் கொண்டு வரும் பன்றிகளை சோதனை செய்த பின்னரே அனுமதிக்க வேண்டும், என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

வாகன சோதனை

மேலும் கர்நாடக மாநில எல்லை பகுதிகளான தலப்பாடி, ஜால்சூர், சாரடுக்கா ஆகிய பகுதிகளில் சிறப்பு சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த வழியாக பன்றிகளை ஏற்றி வரும் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு ரசாயன மருந்து தெளிக்கப்பட்ட பிறகு அனுமதிக்கப்படுகிறது, என்றார்.


Next Story