சாராயம் குடித்து போதையில் உறங்கிய யானைக் கூட்டம்: ஒடிசாவில் ருசிகரம்


சாராயம் குடித்து போதையில் உறங்கிய யானைக் கூட்டம்: ஒடிசாவில் ருசிகரம்
x

ஒடிசாவில் ‘இலுப்பைப் பூ’ சாராயம் குடித்து யானைக் கூட்டம் ஒன்று போதையில் உறங்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

புவனேஸ்வர்,

இலுப்பை மரப் பூக்களை நீரில் ஊறவைத்து சாராயம் தயாரிப்பது நம் நாட்டில் பல பழங்குடியின சமுதாயத்தினரின் வழக்கமாக உள்ளது. அப்படித்தான் ஒடிசா மாநிலத்தில் கியோன்ஜர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தினர் இலுப்பைப் பூ சாராயம் தயாரிக்கும் முயற்சியில் இறங்கினார்.

அவர்கள், தங்கள் கிராமத்துக்கு அருகில் உள்ள முந்திரிக்காட்டுப் பகுதியில் பெரிய பெரிய பானைகளில் தண்ணீரில் இலுப்பைப் பூக்களை ஊறவைத்தனர். மறுநாள் காலையில் அதிலிருந்து 'மக்குவா' என்று நாட்டு சாராயம் தயாரிப்பதற்காக அங்கு சென்ற கிராமத்தினருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அந்தப் பானைகள் எல்லாம் உடைந்து கிடக்க, அருகிலேயே 24 யானைகள் கொண்ட ஒரு கூட்டம், ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தது. அவற்றை எழுப்புவதற்கு கிராம மக்கள் செய்த முயற்சி பலனளிக்கவில்லை. அதன்பிறகு வனத்துறையினருக்கு அவர்கள் தெரிவித்தனர்.

வனத்துறையினர் வந்து, பெரிய மேளங்களை அடித்து சப்தம் எழுப்பியபிறகுதான் அந்த 'கும்பகர்ண' யானைகள் உறக்கம் கலைந்து காட்டுக்குள் சென்றன.

அவை போதையில்தான் உறங்கின என்று கூறமுடியாது, சாதாரணமாகக் கூட தூங்கியிருக்கலாம் என்று வனத்துறை அலுவலர்கள் கூறுகின்றனர். ஆனால், சாராயப் பானைகள் எல்லாம் உடைந்து கிடந்த நிலையில், பக்கத்திலேயே யானைகள் படுத்திருந்தன. எனவே அவை நிச்சயம் சாராயம் குடித்திருக்க வேண்டும் என்று கிராமத்தினர் அடித்துச் சொல்கின்றனர். உண்மை என்னவென்று அந்த யானைகள்தான் சொல்லணும்!


Next Story