60 ஆண்டுகளாக இந்தியாவை கொள்ளையடித்து விட்டு... காங்கிரசின் தேர்தல் நிதி வசூலுக்கு பா.ஜ.க. பதிலடி


60 ஆண்டுகளாக இந்தியாவை கொள்ளையடித்து விட்டு... காங்கிரசின் தேர்தல் நிதி வசூலுக்கு பா.ஜ.க. பதிலடி
x
தினத்தந்தி 18 Dec 2023 5:53 PM IST (Updated: 18 Dec 2023 6:15 PM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ் எம்.பி. தீரஜ் சாஹுவின் இல்லங்களில் இருந்து கோடிக்கணக்கான பணம் கைப்பற்றப்பட்ட நிகழ்வை, திசை திருப்பும் நோக்கில் இந்த பிரசாரம் நடத்தப்படுகிறது என்று பா.ஜ.க. தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி,

நாட்டில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் அரசியல் வியூகங்களை வகுத்து வருகின்றன. இந்நிலையில், காங்கிரஸ் கட்சி வருகிற டிசம்பர் 28-ந்தேதியுடன் 138 ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ளது.

இதனை முன்னிட்டு, தேசத்திற்காக நன்கொடை அளியுங்கள் என்ற பெயரிலான ஆன்லைன் வழியே மக்களிடம் நிதி சேகரிக்கும் திட்டம் ஒன்று இன்று துவக்கி வைக்கப்பட்டது. டெல்லியில் நடந்த இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொது செயலாளர் கே.சி. வேணுகோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதனை துவக்கி வைத்து கார்கே பேசும்போது, காங்கிரஸ் கட்சி முதன்முறையாக நாட்டுக்காக மக்களிடம் நன்கொடை கேட்கிறது. நீங்கள் பணக்கார மக்களை மட்டுமே சார்ந்து பணியாற்றும்போது, அவர்களுடைய கொள்கைகளை நீங்கள் பின்பற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.

சுதந்திர போராட்டத்தின்போது, பொதுமக்களிடம் இருந்து மகாத்மா காந்தியும் கூட நன்கொடைகளை பெற்றார் என அவர் பேசியுள்ளார். காந்தியின் திலக் ஸ்வராஜ் நிதி திட்டத்தின் மீதுள்ள ஈர்ப்பால் இதனை செய்கிறோம் என காங்கிரஸ் தெரிவித்து உள்ளது. 138 ஆண்டுகள் நிறைவையொட்டி இந்த நன்கொடைகளை பெறுவதற்காக, காங்கிரஸ் வலைத்தளத்தில் லிங்க் ஒன்று வழங்கப்பட்டு உள்ளது.

அதில் நன்கொடையாளர்கள் ரூ.138, ரூ.1,380 மற்றும் ரூ.13,800 என்ற அளவில் தொகையை வழங்கும்படி தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனினும், வேறு அளவிலான தொகையையும் நன்கொடையாளர்கள் செலுத்த முடியும்.

காங்கிரஸ் கட்சியானது நிதி பற்றாக்குறையால் போராடி வருகிறது. அதிக நிதிவளம் கொண்ட பா.ஜ.க.வின் தேர்தல் இயந்திரத்திற்கு எதிராக போராட வேண்டியுள்ளது. அதற்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது என காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

கடந்த 2018-ம் ஆண்டும் இதேபோன்று நிதி சேகரிக்கும் பிரசாரத்தில் காங்கிரஸ் ஈடுபட்டது. மக்களவை தேர்தலை முன்னிட்டு தொடங்கப்பட்ட இந்த பிரசாரம் எதிர்பார்த்த அளவுக்கு பலனளிக்கவில்லை.

இந்நிலையில், இந்த நிதி சேகரிப்பு பிரசாரத்திற்கு பா.ஜ.க. பதிலடி கொடுத்துள்ளது. 60 ஆண்டுகளாக இந்தியாவை கொள்ளையடித்தவர்கள் தற்போது நிதி கேட்டு வருகின்றனர். காங்கிரஸ் எம்.பி. தீரஜ் சாஹுவின் இல்லங்களில் இருந்து கோடிக்கணக்கான பணம் கைப்பற்றப்பட்டதற்கு எதிராக, அதனை திசை திருப்பும் நோக்கத்தில் இந்த பிரசாரம் நடத்தப்படுகிறது என்று பா.ஜ.க. தெரிவித்து உள்ளது.

முந்தின கால பதிவை பார்க்கும்போது, பொதுமக்களின் நிதியை கொள்ளையடித்து, காந்திகளை பணக்காரர்களாக ஆக்கும் மற்றொரு முயற்சியே தவிர வேறெதுவும் இல்லை என அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அமித் மாளவியா தெரிவித்து உள்ளார்.

காங்கிரஸ் கட்சி நன்கொடையாக பெற்ற ரூ.90 கோடியை, நேசனல் ஹெரால்டு பத்திரிகையை நடத்தி வரும் நிறுவனத்திற்கு கடனாக கொடுத்தது. பின்னர் அதனை 'தள்ளுபடி' செய்தது. ரூ.2 ஆயிரம் கோடிக்கு கூடுதலான மதிப்பிலான நிறுவனத்தின் 99 சதவீத பங்குகளை அக்கட்சி கைவசப்படுத்தியது. இதற்காக, சோனியா மற்றும் ராகுல் காந்திக்கு 76 சதவீதம் உடைமையான யங் இந்தியா நிறுவனத்திற்கு பணபரிமாற்றம் செய்யப்பட்டது.

ரூ.50 லட்சம் பணபரிமாற்றம் செய்து விட்டு ரூ.89.5 கோடி சலுகையுடன் ரூ.90 கோடியை காங்கிரஸ் 'தள்ளுபடி' செய்துள்ளது. ரூ.50 லட்சம் பணத்திற்கு ஈடாக ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துகளை அக்கட்சி கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது என்று அவர் குற்றச்சாட்டாக தெரிவித்து இருக்கிறார்.

அதனால், காங்கிரசின் இந்த பேச்சுகளால் முட்டாளாகி விடாதீர்கள். மகாத்மா மற்றும் திலக் ஆகிய இருவரின் மதிப்பையும் அவர்கள் களங்கப்படுத்தி விடுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Next Story