ஊழல், விலைவாசி உயர்வுக்கு எதிராக நடக்கும் கர்நாடக தேர்தல் ராகுல்காந்தி பேச்சு


ஊழல், விலைவாசி உயர்வுக்கு எதிராக  நடக்கும் கர்நாடக தேர்தல் ராகுல்காந்தி பேச்சு
x
தினத்தந்தி 2 May 2023 6:45 PM GMT (Updated: 2 May 2023 6:46 PM GMT)

கர்நாடக சட்டசபை தேர்தல் ஊழல் மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிராக நடக்கும் தேர்தல் என்று ராகுல்காந்தி கூறினார்.

சிவமொக்கா-

கர்நாடக சட்டசபை தேர்தல் ஊழல் மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிராக நடக்கும் தேர்தல் என்று ராகுல்காந்தி கூறினார்.

சட்டசபை தேர்தல்

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கர்நாடகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்குசேகரித்து வருகிறார். நேற்று அவர் சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளியில் நடந்த காங்கிரஸ் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பிரதமர் நரேந்திர மோடி எங்கு சென்றாலும் தன்னைப் பற்றியே பெருமையாக பேசி வருகிறார். அது கர்நாடக தேர்தல் பிரசாரத்திலும் தொடர்கிறது. அவர் அதைத்தவிர வேறு எதையும் பேசுவதில்லை. ஏன் பிரதமர் மோடி கர்நாடகத்தில் நடந்த ஊழல் மற்றும் முறைகேடுகள் பற்றி பேசுவதில்லை. அதுபற்றி அவர் மவுனம் காப்பது ஏன்? என்று தெரியவில்லை.

மக்களின் எதிர்காலம்...

மேலும் அவர் ஒரு இடத்தில்கூட முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, மாநில உள்துறை மந்திரி அரக ஞானேந்திரா ஆகியோரின் பெயர்களை குறிப்பிடுவதில்லை. அது ஏன்?. கர்நாடகத்தில் நடைபெற இருக்கும் தேர்தல் பிரதமர் நரேந்திர மோடியின் கையை வலுப்படுத்துவதற்காக அல்ல. இந்த தேர்தல் மக்களின் எதிர்காலம் மற்றும் அவர்களது குழந்தைகளின் எதிர்காலம் பற்றியது. அதை நான் உங்களுக்கு(மக்கள்) நினைவுகூறுகிறேன்.

நீங்கள்(மக்கள்) பிரதமர் மோடியின் பிரசார கூட்டத்தை பார்த்திருக்கிறீர்களா?. அவர் நேரடியாக வருகிறார். அவர் யாரையும், எந்தவொரு தலைவரையும் கண்டுகொள்ளாமலும், அவர்களைப் பற்றி பேசாமலும் நேராக பிரசார செய்கிறார்.

வியப்பாக பார்க்கிறார்கள்

நான் பேசும்போது முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, டி.கே.சிவக்குமார், மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்களின் பெயரை கூறிவிட்டு தான் பேசுகிறேன். முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, எடியூரப்பா, அரக ஞானேந்திரா உள்ளிட்ட தலைவர்களின் பெயரை பிரதமர் மோடி கூறாததை கர்நாடக மக்களே வியப்பாக பார்க்கிறார்கள். ஏன் பிரதமர் மோடி தங்கள் மாநில தலைவர்களின் பெயரை கூறுவதில்லை என அவர்கள் கண்காணிக்கிறார்கள். இது அவர்களை புறக்கணிப்பது போல் உள்ளது.

அவர்களது பெயரை பிரதமர் மோடி கூறாததற்கு நான் 2 காரணங்கள் இருப்பதாக நினைக்கிறேன். ஒன்று, அவர் தன்னைப் பற்றியே பெருமையாக பேசிக் கொள்வது. உதாரணமாக பிரசாரத்தில் ஈடுபடும் பிற கட்சி தலைவர்கள் கர்நாடகம் பற்றியும், அதன் வளர்ச்சி மற்றும் ஊழல் குறித்தும் பேசுகிறார்கள். ஆனால் பிரதமர் மோடி தன்னைப்பற்றி மட்டுமே பேசி பெருமை தேடிக் கொள்கிறார். அவர் கடந்த 3 ஆண்டுகளில் கர்நாடகத்தில் பா.ஜனதா அரசு செய்த பணிகள் குறித்து ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை.

40 சதவீத கமிஷன்

இன்னொன்று, கர்நாடகத்தில் இருப்பது திருட்டு அரசு. அவர்கள் ஜனநாயகத்தை ஏறி மிதித்து ஆட்சிக்கு வந்தவர்கள் ஆவர். இதனால் தான் பிரதமர் மோடி கர்நாடக அரசு பற்றியும், கர்நாடக தலைவர்கள் பற்றியும் பேசுவதில்லை என்று நான் கருதுகிறேன். ஊழலை ஒழிக்க பிரதமர் மோடி என்ன நடவடிக்கை எடுத்தார். ஒப்பந்ததாரர்கள், 40 சதவீத கமிஷன் குறித்து பகிரங்கமாக கடிதம் அனுப்பியும் அதற்கு பிரதமர் மோடி பதிலளிக்கவில்லை.

இந்த தேர்தல் ஊழல், விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றுக்கு எதிராக நடக்கும் தேர்தல் ஆகும்.

இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.


Next Story