மத்திய பிரதேசத்தில் பரபரப்பு; வணிக வளாகத்தில் ஊழியர்கள் தொழுகை நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
மத்திய பிரதேசத்தில் வணிக வளாகம் ஒன்றில் ஊழியர்கள் சிலர் தொழுகை நடத்தியதற்கு எதிராக வலதுசாரி அமைப்பினர் போராட்டம் நடத்தியது பரபரப்பு ஏற்படுத்தியது.
போபால்,
மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் வணிக வளாகம் ஒன்று உள்ளது. இதில் பணியாற்றும் ஊழியர்கள் சிலர் தரை தளத்தில், தீ விபத்து உள்ளிட்ட அவசரகாலத்தில் வெளியேறி செல்லும் பகுதியில் தொழுகையில் ஈடுபட்டு உள்ளனர்.
இதுபற்றி தகவல் அறிந்து பஜ்ரங் தள அமைப்பினர் சிலர் வணிக வளாகத்திற்கு வந்தனர். அவர்கள், இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன் தொழுகையில் ஈடுபட்ட நபர்களை வீடியோவாக படம் பிடித்தனர்.
தொழுகை நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பஜனை பாடல்களை பாடி போராட்டம் நடத்தினர். இதனால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, வணிக வளாகத்தின் நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு பணியாளர்கள் அந்த பகுதிக்கு வந்து இரு தரப்பினரையும் சமரசப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.
சம்பவம் பற்றி அறிந்ததும் போலீசார் வணிக வளாகத்திற்கு சென்றுள்ளனர். இதுபற்றி பஜ்ரங் தள அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான தினேஷ் யாதவ் கூறும்போது, கும்பலாக தொழுகையில் ஈடுபடுவது நீண்டகாலம் நடந்து வருகிறது. இதுபற்றி வணிக வளாகத்தில் உள்ள மற்ற பணியாளர்கள் எங்களிடம் தகவல் தெரிவித்தனர்.
வணிக வளாகத்தில் தொழுகை நடத்த அனுமதி அளிக்கப்பட்டால், அதன்பின்னர் வணிக வளாகத்தின் முன்பு கூட்டாக சேர்ந்து அனுமன் பஜனை பாடல்கள் பாடப்படும் என எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
இதுபற்றி எஸ்.பி. நகர் காவல் நிலைய உயரதிகாரி சுதீர் அர்ஜாரியா கூறும்போது, இதுவரை இரு தரப்பிலும் இருந்து ஒருவரும் புகார் எதுவும் தெரிவிக்கவில்லை என கூறியுள்ளார். இரு தரப்பினரையும் அழைத்து அவர்களிடம் பேசி, விளக்கம் அளித்து உள்ளோம். அதன்பின், இந்த விவகாரம் தீர்க்கப்பட்டு விட்டது என கூறியுள்ளார்.
இந்த சம்பவம் எதிரொலியாக, வணிக வளாகத்தின் நிர்வாகமும், இனி உள்ளே எந்தவொரு மதம் சார்ந்த செயல்களிலும் ஈடுபட கூடாது என்பதற்கான அறிவுறுத்தல்களை பிறப்பிக்க உள்ளது என்றும் சுதீர் கூறியுள்ளார். சமீபத்தில் உத்தர பிரதேசத்தில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் இதேபோன்றதொரு சம்பவம் நடந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.