அதிமுக பொதுக்குழு: ஓபிஎஸ் கேவியட் மனு தாக்கல்


அதிமுக பொதுக்குழு: ஓபிஎஸ் கேவியட் மனு தாக்கல்
x
தினத்தந்தி 27 Jun 2022 2:08 PM GMT (Updated: 27 Jun 2022 2:09 PM GMT)

அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடா்பாக ஐகோர்ட்டில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கேவியட் மனு தாக்கல் செய்து உள்ளாா்.

சென்னை,

அதிமுக பொதுக்குழுவிற்கு தடை விதிக்கக் கோரி கடந்த 22- ந் தேதி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கினை விசாரித்த தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தார். இதை எதிர்த்து, ஓ.பன்னீர்செல்வம் சார்பில் அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் மேல்முறையீடு செய்தார். மேலும் இந்த வழக்கினை ஐகோர்ட்டில் அவசர வழக்காக விசாரிக்கப்பட்டது.

இதையடுத்து இந்த வழக்கை நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு நள்ளிரவு விசாரணை நடத்தினர். விடிய விடிய நடந்த மேல்முறையீடு வழக்கில் வாதங்கள் முடிந்த நிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடையில்லை. அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை தவிர புதிய தீர்மானங்கள் நிறைவேற்றக்கூடாது.

அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை தவிர புதிய தீர்மானங்களில் முடிவு எடுக்கக்கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

23 தீர்மானங்கள் குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கலாம். அதிமுக பொதுக்குழுவில் புதிய தீர்மானங்கள் குறித்து ஆலோசித்தாலும் எந்த முடிவும் எடுக்கக்கூடாது. அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக ஓ.பன்னீர் செல்வத்தின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. இன்றைய அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எவ்வித தடையும் விதிக்கவில்லை என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், இந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டால், தனது கருத்தையும் கேட்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கேவியட் மனு தாக்கல் செய்து உள்ளாா்.


Next Story