அதிமுக விவகாரம்: ஈபிஎஸ் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
அதிமுக விவகாரத்தில் ஈபிஎஸ் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது.
புதுடெல்லி,
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், விரைவில் தீர்ப்பு வெளியாக உள்ளது. ஆனால் அதற்குள் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல், அதிமுகவின் உட்கட்சி பூசலை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் என இருதரப்பினரும் தனித்தனியே வேட்பாளரை களமிறக்க ஆயத்தமாகி வரும் நிலையில், இரட்டை இலைச் சின்னமும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், அதிமுகவின் பொதுக்குழுவில் தன்னை இடைக்காலப் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த மேல் முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வருகிறது. இதனால் அரசியல் களத்தில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் என்ற பெயரில் சுப்ரீம் கோர்ட்டில் இதுவரை வாதிட்ட அத்தனை அம்சங்களையும் திரட்டி முறையிட எடப்பாடி பழனிசாமி அணியினர் தயாராகி வருகிறார்கள். மூத்த வக்கீல் அரிமா சுந்தரம், வக்கீல் பாலாஜி சீனிவாசன் உள்ளிட்டோர் இதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.