இந்தியாவின் சிறந்த அமைப்புகளில் ஒன்றாக ஜம்மு எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளது: மத்திய மந்திரி நட்டா


இந்தியாவின் சிறந்த அமைப்புகளில் ஒன்றாக ஜம்மு எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளது:  மத்திய மந்திரி நட்டா
x

ஜம்மு எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள வசதிகள், உட்கட்டமைப்புகள், சாதனங்கள், நவீன உபகரணங்கள் மற்றும் பிற பொருட்கள் உலக தரத்திலானவை என்று மத்திய மந்திரி நட்டா கூறியுள்ளார்.

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் அமைந்துள்ள ஜம்மு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய சுகாதார மந்திரி ஜே.பி. நட்டா இன்று நேரில் சென்று பார்வையிட்டார். அவருடன் மத்திய மந்திரி ஜிதேந்திரா சிங் மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீரின் பா.ஜ.க. தலைவர் ரவீந்தர் ரெய்னா உள்ளிட்டோரும் சென்றனர்.

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய நட்டா, ஜம்மு எய்ம்ஸ் மருத்துவமனையானது கடந்த பிப்ரவரியில், பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. அதன்பின் வகுப்புகள் தொடங்கப்பட்டன. இதில் அமைக்கப்பட்டு உள்ள வசதிகளை நான் பார்வையிட்டேன். இந்தியாவின் சிறந்த அமைப்புகளில் ஒன்றாக ஜம்மு எய்ம்ஸ் மருத்துவமனை இருக்கிறது என்றார்.

ஜம்மு எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள வசதிகள், உட்கட்டமைப்புகள், சாதனங்கள், நவீன உபகரணங்கள் மற்றும் பிற பொருட்கள் உலக தரத்திலானவை என்றும் அவர் கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர், இனி ஜம்மு மற்றும் காஷ்மீர், பஞ்சாப் மற்றும் இமாசல பிரதேசத்தில் இருந்து மக்கள் சிகிச்சை பெறுவதற்காக சண்டிகாருக்கோ அல்லது டெல்லிக்கோ செல்ல வேண்டியதில்லை. அவர்களுக்கு ஜம்மு எய்ம்ஸ் மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்கப்படும் என்றார்.

ஜம்மு மற்றும் காஷ்மீரில் நடப்பு ஆண்டு செப்டம்பரில் முதன்முறையாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, பா.ஜ.க.வின் தேசிய தலைவரான நட்டா, ஜம்மு மற்றும் காஷ்மீர் பிரிவு தலைவர்களுடன் கூட்டம் ஒன்றை ஜம்முவில் வைத்து நடத்தினார்.


Next Story